LOADING

Type to search

இந்திய அரசியல்

திமுக விஜய்யை குறைத்து எடைபோடுகிறது – மு.க.அழகிரி மகள் கயல்விழி

Share

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும் என்று மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுகவுக்கு எதிராக நான் பேசவில்லை. கூட்டணி பலமும், பெரிய அளவுக்கான எதிர்ப்பற்ற தன்மையும் திமுகவை திரும்பவும் ஆட்சிக்குக் கொண்டு வருவது போல்தான் இருந்தது. ஆனால் விஜய் வந்த பிறகு நிலைமையே வேறு. களத்தில் விஜய் விளையாடுகிறார். நிச்சயம் கணிசமான வாக்குகளை விஜய் பிரிப்பார். திமுக அவரை குறைத்து எடைபோடுகிறது. அவர் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும். விஜய்யால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை கூட அமையலாம். இந்த மாதிரியான சூழலில் அப்பாவையும், சீனியர் நிர்வாகிகளையும் அனுசரித்து, அவர்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் வெற்றி பெற நினைக்க வேண்டும். அதை செய்யாமல் சர்வாதிகாரமாக செயல்படுவது திமுகவின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். இதே ஆதங்கம் கட்சியின் சீனியர்கள் பல பேரிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.