LOADING

Type to search

கனடா அரசியல்

“தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்கையில், கனடாவில் ‘உதயன்’ ஊடகம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேவையாற்றுவது சாதனையாகும்”

Share

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கனடாவின் ஸ்காபுறோவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் புகழாரம்

“இன்றைய சூழலில் கையில் கைப்பேசி வைத்திருக்கின்ற அனைவரும் ஊடகவியலாளர்களாக மாறியுள்ள சூழலில் அச்சு ஊடகங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்லும் காலகட்டத்தில், கனடாவில் ‘உதயன்’ போன்ற ஊடகங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேவையாற்றுவது அளப்பரிய சாதனையாகும். இது கனடியத் தமிழ் சமூக வரலாற்றின் முக்கிய அத்தியாயமாகும்” அத்துடன் கனடியத் தமிழர்களின் ஒரு அடையாளமாகவும் ‘உதயன்’ பத்திரிகை திகழ்வதை நான் உணர்கின்றேன்”

இவ்வாறு இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார் மேற்படி விழாவில் அவர் உரையாற்றும்போதே அவர் உதயன் பத்திரிகையையும் பாராட்டினார். கனடாவில் 30 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றி வரும் உதயன் ஊடகக் குழுமத்தின் நிகழ்வுகளில் பங்கேற்பதை மகிழ்ச்சியான பொழுது ஒன்றாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உதயன் ஊடகம் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் தமிழ் ஊடகச் சேவையை முன்னெடுத்து வருவதுடன், கடந்த 20 ஆண்டுகளாக ஊடக விருதுகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், அந்நிறுவனத்தின் பங்களிப்பை உயர்வாகப் பாராட்டினார்.

தொடர்ந்த அந்த விழாவில் இலங்கை அரசியல் குறித்து கருத்து வெளியிட்ட மனோ கணேசன், பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்துள்ள உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளில் ஒருவன் நானாக இருக்கிறேன். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எனது நீண்டகால நண்பர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் அரசியல் நட்பு இருந்து வருகிறது. இன்று அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவராகவும், நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகவும் உள்ளோம்”

“இன்று இலங்கையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தை விட அதிகம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக உள்ளார். ஆளும் தரப்பில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் பலரின் பெயர்களைக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதியின் பெயர் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது”

“ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் பல முக்கிய விடயங்கள் தாமதமாகியுள்ளன. அநுர அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் கவலையளிக்கும் விடயமாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் நடைமுறையில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. காணி பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. இவை குறித்து நான் ஜனாதிபதியிடம் நேரடியாகக் கூறியுள்ளேன். மீண்டும் கனடா மண்ணிலிருந்தும் அவற்றை நினைவூட்டுகிறேன்”

“நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் மக்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை மக்கள் அறிய வேண்டும். முன்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், இன்று அதே IMF திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்”

1987ஆம் ஆண்டு இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரித்தது ஜே.வி.பி.யின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாக இருந்ததாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், “வரலாற்றை மாற்ற முடியாது. இன்று தேசிய மக்கள் சக்தி (NPP) பல கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளது. அதுபோல தேசிய இனப் பிரச்சினை தொடர்பான அணுகுமுறைகளிலும் மாற்றம் தேவை” என்றார்.

தனது உரையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ள சங்கீதன் கைது தொடர்பாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். அண்மையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராப் பாடகர் சங்கீதன் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.

“முன்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசியவர்கள் இன்று மௌனமாக இருக்கிறார்கள். அந்தச் சட்டத்தை நீக்குவதாக கூறியவர்களே, அதே சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்துள்ளனர். சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். தெரிவு செய்யப்பட்ட கைதுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்த அழைப்பில் மனோ கணேசன் அவர்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தினரின் பங்களிப்பைப் பாராட்டிய மனோ கணேசன், “உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்துள்ள கனடியத் தமிழ் சமூகம், தாயகத்தின் வளர்ச்சிக்காக தங்களின் நிதி மற்றும் அறிவாற்றல் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். தாயகத்தின் மறுமலர்ச்சியில் புலம்பெயர் சமூகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

தனது ‘கிளிநொச்சி’ என்னும் திரைப்படத் திட்டம் குறித்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மனோ கணேசன் அவர்கள்

தனது கனடா பயணத்திற்கான மற்றொரு நோக்கமாக ‘கிளிநொச்சி’ திரைப்படத் திட்டம் உள்ளதாகவும் மனோ கணேசன் வெளிப்படுத்தினார்.

“எனக்குள் சினிமா மீதான ஆர்வம் இன்னும் உள்ளது. ‘கிளிநொச்சி’ என்ற திரைப்படத் திட்டத்திற்காகவும் கனடா வந்துள்ளேன். இது ஒரு காதல் கதையாக அமையும். கதைக்களம் கனடா – இலங்கை – இந்தியா என்ற பாணியில் திட்டமிட்டிருக்கிறோம். ” என்று அவர் தெரிவித்தார். மக்கள் அவரது உரையை அமைதியாக இருந்து செவிமடுத்தார்கள்.