நச்சு வாயு தாக்கியதில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது
Share
நச்சு வாயு தாக்கியதில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டிடத் தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, அத்தொட்டியில் உருவாகியிருந்த நச்சு வாயு தாக்கியதில் பாஸ்கரன், தினகரன், ராமசந்திரன் என்ற மூன்று கட்டிட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் மூன்று குடும்பத்திற்கும் தலா ரூபாய் 30 லட்சம் இழப்பீட்டை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். இதுபோன்ற கோர நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















