நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க.வுக்கு ஆதரவு – எம்.எல்.ஏ. காமராஜ் பேட்டி
Share
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ், தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த சூழலில், இன்று காலை சட்டமன்றம் கூடியபோது, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் அவையில் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி. தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அவருடைய வெற்றிக்காக அ.ம.மு.க. தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் பாடுபட்டனர். அவர், கட்சியின் கொள்கை குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதற்காக நீக்கப்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அ.ம.மு.க. கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. காமராஜ் நீக்கம் செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியின்போது, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரை புகழ்ந்து பேசியது தவறா? என கேட்டார். என் மீது கட்சி நடவடிக்கை மேற்கொண்டால் அதுபற்றி கவலை இல்லை. மன்னார்குடி தொகுதி மக்களுக்கு திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்று கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என கேட்டதற்கு, த.வெ.க.வுக்கு ஆதரவு தருவேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் இன்றைய தினம் காலையில் அவர் பேசும்போது, இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். நிச்சயம் ஒரு நல்ல அரசை முதல்-அமைச்சர் விஜய் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முதல்-அமைச்சரால்தான் தமிழகத்திற்கு நல்ல ஆட்சியை தர முடியும். நீங்கள் கையெழுத்திட்ட 3 திட்டங்களும் தமிழகத்திற்கு நன்மை ஏற்படுத்தும். நீங்கள் நல்லாட்சியை தர வேண்டும். தமிழக இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள். நாங்களும் உங்களை நம்புகிறோம். உங்களை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.















