நீதிமன்றங்கள் தொடர்பாக ஊடகங்கள் உண்மைக்கு மாறாக பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என யாழ்ப்பாண நீதிபதி கண்டனம்!
Share
ந.லோகதயாளன்.
நீதிமன்ற நடவடிக்கை உள்ள விடங்களில் ஊடகங்கள் செய்தி பிரசுரிக்கும்போது உண்மைக்கு அப்பால் சென்று பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக விரிவுரையாளர் திருமதி திலீபனின் தயாளினியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை 2ம் திகதி வியாழக்கிழமை அன்று யாழ்ப.பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின்போது முதலாம் சந்தேக நபர் தொடர்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை. சட்டத்தரணி இல்லாது விடினும் நேரடியாக ஏதும் விடயம் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீர்களா என நீதவான் கோரிபோதும் முதலாம் சந்தேக நபர் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம் இரண்டாம் சந்தேக நபரான பெண் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துக்கொரல கொலைக்கான பின்னணி தொடர்பில் மன்றுறைத்தார்.
இதன்போது சந்தேக நபரை பாதிக்கப்பட்டவர் வாழும் கிராம சேவகர் பிரிவு எல்லைக்குள் பிரவேசிக்க கூடாது. என ஓர் கட்டளையும், 2 ஆம் சந்தேக நபர் கல்வி கற்கும் பாடசாலை மற்றும் 2 ஆம் சந்தேக நபர் செல்லும் எந்த இடத்திற்கும் செல்லக் கூடாது என்ற கட்டளையும் ஏற்கனவே மன்றினால் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.
இவை அனைத்தையும் மீறிச் செயல்பட்டுள்ளார். இதேநேரம் இக் கொலை இடம்பெற்றதான சம்பவ தகவல் வெளியான மறுநாளே உயிரிழந்தவரின் மகளும் 2 ஆம் சந்தேக நபருமான எனது கட்சிக்காரர் உயிரிழந்தவரின் காலை அழுத்திப் பிடித்திருக்க முதலாம் சந்தேக நபர் கழுத்தை நெரித்தார் என முதலாம் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பத்திரிகையும், சமூக ஊடகங்களும் செய்தியிட்டுள்ளன. சந்தேக நபர் வாக்கு மூலம் கொடுத்திருந்தாரோ அது நீதிமன்ற பி அறிக்கையிலேயே இடம்பெற முடியாது
இது பொலிஸாரின் புலன் விசாரணையை குழப்புவதாகவும் சமூகத்தில் மாறான கருத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல இது ஓர் நீதிமன்ற அவமதிப்பான விடயம் என்றார்.
இதளநேரம் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆரான ஜனாதிபதி சட்டத்தரணி பாதிக்கப்பட்டவரின் மகனிடம் உயிரிழந்தவரின் கைப்பட எழுதிய சில ஆவணங்களும் உயிரிழந்தவர் கடைசி நாள் வரை பயன்படுத்திய கைத் தொலைபேசியும் உள்ளது. அதனையும் புலன் விசாரணைக்கு உட்படுத்தினால் மேலதிக தகவல்கள் கிடைக்ககூடும் எனக் கருதி ஒப்படைக்க தயாராகவுள்ளார்.
சந்தேக நபர் சார்பில. ஆஜரான சட்டத்தரணி கூறியதுபோன்று நான் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையானபோது சந்தேக நபர்கள் சார்பில் எந்த சட்டத்தரணியும் ஆஜராகவில்லை. பாதிக்கப்பட்டவருக்காக எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார் என மன்று ஆவணத்தில் தெளிவாக குறிப்பிட்ட பின்பும் சில ஊடகங்களும், சமூக வலைத் தள ஊடகங்களிலும் பொய்யாக நான் 2 ஆம் சந்தேக நபர் சார்பில் ஆயரானதாக செய்திகள் பரப்பப்படுகின்றது என்றார்.
இவற்றை ஆராய்ந்த நீதவான் பி.லெனின்குமார் ஊடகவியலாளர்கள் நேரில் வந்து நீதிமன்ற ஆவணங்களை பார்வையிட முடியும் அல்லது வழக்கு விசாரணையின்போதும் நேரில் வந்து குறிப்பெடுத்து செய்தியிட முடியும். ஆனால் உண்மைக்கு மாறாக செய்தி பிரசுரிப்பது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் என எச்சரித்ததோடு சந்தேக நபர்களை 2026-04-16 வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.















