நவநீதம் பிள்ளையின் அமைதியான உலகை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர வாழ்த்தி மகிழ்கிறேயென டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
Share
நவநீதம் பிள்ளையின் பொதுப்பணியும், அமைதியான உலகை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 5-ந்தேதி தொடங்கியது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘தமிழ் வம்சாவளி’ நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினரான நவநீதம் பிள்ளைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய கொள்கைகளுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் நவநீதம் பிள்ளையின் பொதுப்பணியும், அமைதியான உலகை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.















