நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்
Share
மலைப்பகுதிகள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள அபாயத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், கனமழையின் காரணமாக ஏற்படக்கூடிய நிலச்சரிவு, மண் சரிவு, மலைச்சரிவுகளில் நிலையற்ற தன்மை, சாலைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு போன்ற அபாயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். நிலச்சரிவு ஏற்படக்கூடிய அனைத்து இடங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், குறிப்பாக மலைச்சரிவுகள், சாலை வெட்டுப் பகுதிகள் மற்றும் ஏற்கனவே அபாயம் கண்டறியப்பட்ட இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்றும், கனமழைக்கு முன்னரும், கனமழை பெய்யும் காலங்களிலும் அபாயத்திற்குள்ளாகும் மலைச்சரிவுகள் மற்றும் சாலைப் பகுதிகளை ஆய்வு செய்திட வேண்டுமென்றும், மண் விரிசல், சரிவு, நீர்க்கசிவு உள்ளிட்ட நிலையற்ற தன்மையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.1973-ம் ஆண்டு முதல் பதிவான வரலாற்றுத் தரவுகளின்படி, நீலகிரி மாவட்டத்தில் 490, திண்டுக்கல் மாவட்டத்தில் 257, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 238 மற்றும் தேனி மாவட்டத்தில் 91 நிலச்சரிவு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், மேற்கொள்ளப்பட்ட அபாய மதிப்பீட்டில் நீலகிரி மாவட்டத்தில் 79 மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 24 உயர்/மிக உயர் அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, மலைப்பகுதிகளுக்கான பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தனித்துவமான செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னரே அதன் அறிகுறிகளைக் கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சாலைத் தொடர்பைப் பாதுகாத்தல், தேவையான இடங்களில் மக்களை வெளியேற்றுதல் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகங்கள் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டுமென்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.















