நீட் ரத்து தீர்மானத்திற்கு பாமக முழு ஆதரவென சவுமியா அன்புமணி பேசினார்
Share
நீட் ரத்து தீர்மானத்திற்கு பாமக முழு ஆதரவென சவுமியா அன்புமணி பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் சவுமியா அன்புமணி முழு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். நீட் தேர்வு முறையால் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத அவலநிலை நீடிக்கிறது. தற்போதுள்ள சூழலில் வெறும் 15 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது. இது உண்மையான திறமைக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பாமகவின் தொடர் கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசே மருத்துவச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற வேண்டும் என வலியுறுத்தினார். வணிகமயமாக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நிறைவேற்றப்படும் இந்தத் தனித் தீர்மானத்தை பாமக முழு மனதுடன் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.















