LOADING

Type to search

இலங்கை அரசியல்

நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வு இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் குருக்கள்மட காணியொன்றில் மனித எச்சங்கள் காணப்படாததால் மூடப்பட்டது

Share

தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 150-இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்களின் உடல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட அந்தக் காணியில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2.8 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

மனித புதைகுழி ஒன்றைத் தேடும் நோக்கில் தற்செயலாக மனித எச்சங்கள் எதுவும் கண்டெடுக்கப்படாமல் நீதிமன்ற மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமொன்று இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதுமின்றி மூடிவிட நேர்ந்த இலங்கையின் முதலாவது இடம் மட்டக்களப்பில் அமைந்துள்ள குருக்கள்மடமாகும்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமயத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் உள்ள கடற்கரை காணியில், 2026 மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், சட்டவைத்திய அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பை சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டும்போது கடல் நீர் ஊற்றெடுத்ததையடுத்து, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் பூர்த்தியான 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை வேளையில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முகஸம் தெரிவித்தார்.

“இன்றைய தினம் இரண்டு மீற்றர் ஆழத்துக்கு அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அகழ்வுப் குழி நீரினால் நிரம்பியதால், அகழ்வுப்பணியைத் தொடர்வதில் பயனில்லை என்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் தீர்மானத்துக்கு இணங்க, அகழ்வுப் பணிகள் இன்று நிறைவு செய்யப்பட்டன.”

அகழ்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் 9 அடி ஆழத்துக்கு அகழ்வுப்பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அந்த நிலப்பரப்பை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறும் சட்டத்தரணி முபாரக் முகஸம் குறிப்பிட்டார்.

“இப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள வேறொரு பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஏப்ரல் மாதம் புத்தாண்டின் பின்னர் சந்தேகத்துக்குரிய பகுதியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மனித எச்சங்களோ அல்லது வேறு எச்சங்களோ கண்டெடுக்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டன.”

இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் ஒரு பாரிய புதைகுழியைக் கண்டறிவதற்காக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். இதற்கு முன்னர் வடக்கிலும், கொழும்பிலும், சம்பூரிலும், மாத்தளையிலும் தற்செயலாக மனித எலும்புகள் தென்பட்ட பின்னரே இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பாரிய புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2025 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.