LOADING

Type to search

இந்திய அரசியல்

போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்

Share

போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சர்வாதிகார போக்கோடு செயல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் 13 கோடி மக்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில், இடதுசாரி அமைப்புகள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னையிலும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் மறியல் போராட்டத்தை அண்ணாசாலை பெரியார் சிலை அருகில் நடத்தியது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் க.பாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர், க.இப்ராகிம், ஆ.மணிகண்டன், ர.சௌமியா உட்பட, இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். காவல்துறை தாக்குதலால் காயமடைந்துள்ள மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.