LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக். 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்

Share

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 3-ந்தேதி தீவிர பிரசாரம் செய்கிறார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தொகுதியில் 5 முனை போட்டி நிலவுவதால், ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தி.மு.க. தரப்பில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மதுராந்தகத்தில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை தி.மு.க. வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 3-ந்தேதி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் சிறப்புரையாற்றுகிறார்.