மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது
Share
மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை கொண்டுவர முந்தைய தமிழ்நாடு அரசும், புதிய அரசும், தமிழ்நாடு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பதும் புதிய திட்டம் மக்களின் போக்குவரத்துக்கு பேருதவியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் மதுரை ,கோவை மாநகரங்களிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். . மெட்ரோ ரெயில் கொள்கையின் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர் , சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை மாநகர்களில் மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஆனால், வட மாநிலங்களில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஆக்ரா,போபால்,பாட்னா போன்ற மாநகரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது, மத்திய அரசின் பாரபட்ச போக்கை காட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய எதிர்மறை போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். பிரதமர் மோடி, உடனடியாக கோவை,மதுரை மாநகர்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















