LOADING

Type to search

இந்திய அரசியல்

மேற்காசிய மோதல்; முப்படைகளின் தலைமை தளபதியுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Share

மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை (25-ந்தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு முன் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு தயாராவது குறித்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மறுஆய்வு கூட்டம் ஒன்று நடந்தது.

இதில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விமான படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சமீர் காமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், மேற்காசியாவில் நடந்து வரும் மோதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதற்கேற்ப இந்தியா தயாராக இருப்பது பற்றியும் படையினருடன் விவாதிக்கப்பட்டது. இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியில் தேங்கியுள்ள சூழலில், அவை பாதுகாப்பாக இந்திய துறைமுகங்களை வந்தடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை கடலோர காவல் படை உதவியுடன் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வந்த போதிலும், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது.