LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா விளையாட்டரங்கு தொடர்பாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் ‘மோதல்’.

Share

இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் இ.சந்திரசேகர், அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து கூட்டத்தை முடித்துக்கொண்ட ‘தந்திரம்’

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் விவகாரத்தில், அரசின் முக்கிய தரப்பினருக்கு இடையிலேயே பெரும் குழப்பமும் காரசாரமான விவாதங்களும் ஏற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்புகையில், “விளையாட்டரங்கு அமைக்கும் பணிகள் தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளன? இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று வினவினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாரும் எதிர்பாராத வகையில், “இந்த விளையாட்டரங்கை அமைப்பதற்கான இடத்தை யார் தெரிவு செய்தது? இதற்கான அனுமதியை வழங்கியது யார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் இ. சந்திரசேகர், “விளங்காமல் பேசக் கூடாது… கொஞ்சம் இருங்கள் தம்பி, நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று உரத்த தொனியில் கண்டிக்கும் வகையில் பேசினார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களானக.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகிய இருவரும் மாறி மாறி குறுக்கிட்டு, முறையான அனுமதிகள் பெறப்பட்டதா என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன என்றும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பினர்.

இந்த உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இவ்வாறான பின்னணியில், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் இந்தக் கூட்டத்தின் ஊடாக பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

எனினும், இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் இ.சந்திரசேகர், அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.