யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிர்வாகத்திற்குள் உள்ள கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் சுகாதார சீர்கேட்டால் துர்நாற்றம் வீசுவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு!
Share
யாழ்ப்பாணம் மாநகரின் நிர்வாகத்திற்குள் உள்ள கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் கழிவுகள் அழுகி, புழுக்கள் பெருகி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சந்தைக்கு வரும் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் குற்றச்சாட்டுகின்றனர்.
யாழ் மாநகர சபையால், சுமார் 80 இலட்சம் ரூபாவுக்கு வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சந்தையில், சந்தையின் உட்புற சுத்தம் அதனுடன் தொடர்புடைய கழிவகற்றல் பணிகளை குத்தகைதாரரும், பொதுவான வெளி சுகாதார மற்றும் கழிவகற்றல் நடவடிக்கைகளை மாநகரசபையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில், இரு தரப்பினரின் பொறுப்புகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, சந்தையில் வெட்டப்படும் மீன்களின் கழிவுகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமல் வாய்க்காலுக்குள் கொட்டப்பட்டு தேங்குவதால் அவை அழுகி, புழுக்கள் பெருகுவதுடன் கடும் துர்நாற்றமும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சந்தைக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் சுகாதார அச்சுறுத்தலுடன் கூடிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சந்தை குத்தகை மூலம் மாநகரசபைக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் நிலையில், பொதுமக்களிடம் தவறாது வரி அறவிடும் மாநகரசபை, அதற்கேற்ப சுகாதார வசதிகளையும் கழிவகற்றல் நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் நீடிப்பது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், யாழ். மாநகரசபையின் சுகாதாரப் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தையை சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலாக மாற்ற வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.















