ரஷியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல்
Share
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு வாரத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களின் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன. ரஷியா படையெடுத்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், நடந்த மிக பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார். இதேபோன்று, மாஸ்கோவை நோக்கி நள்ளிரவில் தாக்க வந்த 200 டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன. எனினும், பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் 555 உக்ரைன் டிரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்தது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று கூறும்போது, தற்போது போரில் டிரோன் தாக்குதல்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அதனால், நடப்பு ஆண்டில் 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். தேவைப்பட்டால் டிரோன் உற்பத்தியை ஆண்டுக்கு 20 மில்லியன் ஆக இரட்டிப்பாக்கும் திறன் உக்ரைனிடம் உள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை விரிவுப்படுத்தவும், வெளிநாட்டு விநியோகங்களை சார்ந்திருத்தலை குறைப்பதற்காகவும் உக்ரைன் எடுத்து வரும் முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார். இந்த சூழலில், ரஷிய தலைநகர் மீது உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
















