ராஜீவ் காந்தி நினைவு தினம் – செல்வப்பெருந்தகை புகழஞ்சலி
Share
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன்” என்று சூளுரை மேற்கொண்ட பாரத ரத்னா ராஜீவ் காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே, டில்லியில் 1982 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளை உலக விளையாட்டு வீரர்களே போற்றி புகழும் அளவிற்கு மிகவும் சிறப்பாக நடத்தி காட்டிய பெருமை ராஜீவ் காந்திக்கு உண்டு. இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்து இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்னை இந்திரா காந்தி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது மிக சோதனையான காலக்கட்டத்தில் பிரதமராக பொறுப்பேற்றவர் ராஜீவ் காந்தி. தமது 40 ஆவது வயதில், பாரத நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று ராஜீவ் காந்தி நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். பிரதமராக பொறுப்பேற்றதும் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இந்தியாவில் இன்று ஏற்பட்டுள்ள அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அன்று வித்திட்டவர். அதனால் தான் இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர். அவரது அணுகுமுறையில் வித்தியாசம் இருந்தது, மாறுதல் இருந்தது. பஞ்சாப் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அஸ்ஸாம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உடன்பாடு கண்டவர். கூர்கா பிரச்சினையையும், மிசோ மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றி, ஜனநாயகத்தை செழுமைப்படுத்தினார். எந்த பிரச்சினையிலும் ஒரு முடிவு காண வேண்டும் என்பதிலே கண்ணும், கருத்துமாக இருந்து செயல்பட்டார்.
ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். ஆனால், இலங்கை தமிழர்களின் வாழ்வில் விடியலைக் கண்ட ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வந்த அவரை ஸ்ரீபெரும்புதூரில் பெண் மனித வெடிகுண்டின் மூலம் கோரமாக படுகொலை செய்தார்கள். அன்று 85 கோடி மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருந்த மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்து மக்களின் விருப்பத்தை சிதைத்தார்கள், நம்பிக்கையை தகர்த்தார்கள். இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தினார்கள். இத்தகைய அரசியல் சீர்குலைவு பயங்கரவாத சக்திகளின் பிடியிலிருந்து நாட்டைக் காக்க அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவுநாளில் சபதம் ஏற்போம். எனவே, வருகிற மே 21 அன்று அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவப் படத்தை வாகனத்தில் பொருத்தி மலர்களால் அலங்கரித்து மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் வழியாக நினைவுப் பேரணி நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அந்த பேரணியில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் சாதனைகளை பட்டியலிட்ட துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன். மே 21 அன்று காலை 9 மணி முதல் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் நானும், மற்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர்களும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினரோடு பங்கேற்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் வகையில் எந்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டாரோ, அங்கு அமைந்துள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















