’ஹபீபி’ திரைப்படம் மே.28ல் வெளியீடு – இயக்குனர் மீரா கதிரவன் அறிவிப்பு
Share
நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரப்படம் மே.28ல் வெளியாகும் நிலையில் அத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது கூறியதாவது: “படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை ரகசியமாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் ‘ஹபீபி’. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”என்றார்.
இயக்குநர் சேரன், “இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்”.
இயக்குநர் கஸ்தூரி ராஜா, “மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்”.
















