LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கில் முதலீடு மற்றும் விவசாயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் தெரிவிப்பு!

Share

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 20ம் திகதி அன்று (20.08.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. சந்திப்பின்போது ஆளுநர், உயர்ஸ்தானிகரை அன்புடன் வரவேற்று, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதன்போது, டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் விரிவாக விளக்கமளித்தார். பாதிப்புகளுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அவற்றைத் தேவைக்கேற்ப தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டித்வா பேரிடர் காரணமாக வடக்கு மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும், மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இம்முறை சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலைப் பெற்றுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். அதிகரித்துள்ள நெல் உற்பத்தியை விவசாயிகளுக்கு பொருளாதாரப் பயனாக மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்களையும் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் சமகால சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம், வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் ஆளுநருடன் கலந்துரையாடினார்.

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் செயன்முறை தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரில் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக கொழும்பிலும் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். இதன்மூலம் காணி விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இதன்படி முதல்கட்டமாக விமான நிலைய முனையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அடுத்த கட்டத்தில் ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், கடந்த காலங்களில் விமான நிலைய விரிவாக்கத்துக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான சில தடைகள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஆளுநர் குறிப்பிட்டார். அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி நாட்டுக்கு வந்து செல்லக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில நிறுவனங்களிலும் தீர்மானம் மேற்கொள்ளும் உயர்நிலைப் பதவிகளிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நிதி ஆணைக்குழு மற்றும் பெறுகை நடைமுறைக் குழு போன்ற முக்கிய தேசிய அமைப்புகளில் இவ்வாறான பிரதிநிதித்துவம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார். முதலீடு, தொழில் முயற்சி, அறிவு மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்