வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய – இலங்கை மீன்பிடி நெருக்கடி குறித்த அநுர அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்
Share
இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இருப்பது என்ற, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு பொறிமுறையொன்றை முன்மொழிந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மேற்கொள்ளும் மீன்பிடியைத் தடுத்து நிறுத்துவதற்காக, எதிர்வரும் மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 2026 ஓகஸ்ட் 13ஆம் திகதி மன்னாரில் மீனவர் சங்கங்களின் தலைவர்களைச் சந்தித்தபோது, தெரிவித்துள்ளார். அதன் பின்னர், “கடற்படையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
“மீண்டும் இதனைப் பரிசீலிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இதற்குப் பொருந்தும் அணுகுமுறையொன்றை முயற்சித்துப் பார்க்க வேண்டும். அந்த அணுகுமுறையின் அடிப்படையில், செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அழைப்பும் எமக்கு கிடைத்துள்ளது.”
மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மன்னார் மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே, அந்தப் பேச்சுவார்த்தைகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீனவர் சங்கத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
“அந்த அழைப்பின் அடிப்படையில், நாம் பார்ப்பது என்னவென்றால், இந்தியாவிற்குச் சென்று முதற்கட்டப் பேச்சுவார்த்தையை அதிகாரிகள் மட்டத்தில் நடத்தவுள்ளோம். அதாவது, மீன்பிடி அமைச்சில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை, மீனவர் சங்கங்களுக்கு இடையில் நடைபெறும். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையாக இருக்கும். இவ்வாறுதான் அவை பிரிக்கப்பட்டுள்ளன.”
மன்னார் கடற்பரப்பில் மட்டுமன்றி, புத்தளம் கடற்பரப்பிலும் இந்திய மீன்பிடிப் படகுகள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, பத்தலங்குண்டுவைச் சேர்ந்த விக்ஸோப மாதா மீனவர் சங்கத்தின் செயலாளர் அன்டன் பொன்சேகா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தங்களது பைபர் படகுகள், இரும்பினால் தயாரிக்கப்பட்ட இந்தியப் படகுகளுடன் மோதினால், அவை சேதமடைந்து விடும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முதலாவது இந்திய உத்தியோகபூர்வ விஜயம் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் கூட கடக்காத நிலையில், 2024 டிசம்பரில் இலங்கை அரசாங்கம், இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டிச் செல்லும் இந்திய மீன்பிடிப் படகுகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனிமேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருந்தது.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கான அமைதியான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கத் தலைவர்களுடன் நடைபெற்ற மன்னார் மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“இந்த இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமா, முடியாதா என்பதை நாம் ஆராய வேண்டும். அதன்மூலம் அமைதியான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதையும் நாம் ஆராய வேண்டும். அதனை அடுத்தக்கட்ட நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக, பேச்சுவார்த்தை மூலம் செய்யக்கூடிய விடயங்களை மேற்கொள்ளும், அதேவேளை கடற்படையினரிடம் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் பொறுப்பையும் நாம் ஒப்படைத்துள்ளோம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, கடற்படையையும் ஓரளவு பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”
மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அமைச்சர் இந்த வாரம் கலந்துகொண்டிருந்தார்.
கொழும்பிற்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மீனவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்ததுடன், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் படகுகளையும் விரைவாக விடுவிப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பையும் கோரியிருந்தார்.
“பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இருதரப்பு பொறிமுறைகள் தொடர்ந்து செயற்பட்டு வரும் நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு மனிதாபிமான அணுகுமுறையொன்று எமது அணுகுமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்” என அவரது விஜயம் நிறைவடைந்ததையடுத்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஓகஸ்ட் 5ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நரேந்திர மோடி மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற முதலாவது அரசத் தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் வடக்கின் மீனவர்கள் திருப்தியடையும் வகையிலான நிலையான தீர்வொன்று எட்டப்படாமல், நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
“இதற்குப் பின்னர் பேச்சுவார்த்தைகள் இல்லை. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துவிட்டன. இனிமேல் எவருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படமாட்டாது.”
கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படாது. எனினும் அந்த பேச்சுவார்த்தைகள் தொழில்நுட்பம், தொழில்சார் விடயங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாக மாத்திரமே தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தார்.















