LOADING

Type to search

உலக அரசியல்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share

2026-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்க, ஜெர்மனி விஞ்ஞானிகள் 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் விஞ்ஞானி ஹென்றி பி.காகன் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி கென்சோ சோய் ஆகியோருக்கு இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில், நேரியல் அல்லாத விளைவுகள் மற்றும் தன்வினையூக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக, ஹென்றி பி.காகன் மற்றும் கென்சோ சோய் ஆகியோருக்கு வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத்தொகை 1 கோடியே 20 லட்சம் சுவீடன் பணம் (சுமார் 11.55 கோடி ரூபாய்) ஆகும். இந்த நோபல் பரிசு வருகிற டிசம்பரில் வழங்கப்படும். நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு 9-ந்தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 12-ந்தேதியும் அறிவிக்கப்படுகிறது.