“1988ஆம் ஆண்டு காணாமல்போன ஜனாதிபதி அநுர குமாரவின் மூத்த சகோதரருக்காக அவரது தாயார் இன்றும் பூஜை செய்து கொண்டிருக்கின்றார்”
Share
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தெரிவிப்பு!
ந.லோகதயாளன்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மூத்த சகோதரரும் 1988ஆம் ஆண்டு காணாமல்போயிருந்தார். இன்றும் அவரது தாயார், தனது மூத்த மகன் ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் பூஜை செய்து கொண்டிருக்கின்றார். அந்தத் தாயின் வேதனையை நேரில் பார்த்தது இன்றும் எனது நினைவில் உள்ளது.
என இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தெரிவித்தார்.
“வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்” காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று (25.08.2026) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள அமைச்சர், , சந்திரசேகரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
“இன்றைய நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வல்ல. பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தேடி, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் வேதனையுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களின் ஆழமான துயரத்தை நினைவுகூரும் முக்கியமான நாளாகும் 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் இன்றும் எம்மத்தியில் உள்ளனர். குறிப்பாக, கைது செய்யப்பட்ட பின்னரோ அல்லது ஒப்படைக்கப்பட்ட பின்னரோ காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகள் ஒருநாள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழும் தாய்மார்களின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும், இவ்வாறான நிலையில், இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அரசாங்கத்தை அமைத்தபோதே ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறியிருந்தார் அதாவது, மக்களின் துன்பத்தையும் வேதனையையும் அன்பினால் மட்டுமே அணுகி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதே அவரது நிலைப்பாடாகும்.
அதற்கு சிறந்த உதாரணமாக, காணாமலாக்கப்பட்டவர்களின் பல குடும்பங்களை எமது சொந்தக் குடும்பங்களாகக் கருதி நாம் அணுகி வருகின்றோம். அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று, அவர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் வேதனைகளையும் கேட்டறிந்து வருகின்றோம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று காலை எமது நீதி அமைச்சரும் வீடுகளுக்குச் சென்றார். மேலும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கல்வி கற்று பொதுவாழ்க்கையில் இணைந்து தற்போது குடும்ப உறுப்பினர்களாக உள்ள 15 பேருக்கான தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை வழங்கினார்
அதேபோன்று, எமது பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்து கொண்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் வெளியில் பெரிய விளம்பரங்களாக வெளியிடப்படுவதில்லை. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாட்டையும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய வேதனை என்னவென்றால், தங்களுடைய உறவுகள் ஒருநாள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இன்றும் காத்திருக்கின்றமையே ஆகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பெரிய சகோதரரும் 1988ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். இன்றும் அவரது தாயார், தனது மூத்த மகன் ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் பூஜை செய்து கொண்டிருக்கின்றார். அந்தத் தாயின் வேதனையை நேரில் பார்த்த அனுபவம் இன்னும் எனது நினைவில் உள்ளது.
அதேபோன்று, நாட்டின் மற்ற பகுதிகளிலும் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் உள்ளன. அவர்களும் தமது பிள்ளைகள் ஒருநாள் திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடி, அவர்களுக்காகப் போராடி, தங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியவாறு இன்றும் நடுங்கிய கைகளுடன் நீதியையும் உண்மையையும் தேடி போராடும் தாய்மார்களை நாம் காண்கின்றோம்.
இந்தப் பிரச்சினை 1980 களின் இறுதிப் பகுதிகளில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் மதித்து அணுக வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
அதேவேளை, மக்களின் காணி உரிமைகள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணிப் பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கம் தீர்வுகளை வழங்கி வருகின்றது.
கடந்த வருடமே சனாதிபதி பாராளுமன்றத்தில் வடக்கில் உள்ள மக்களின் காணிகளில் பெருமளவானவற்றை விடுவிக்க வேண்டும் என்று விசேடமாக அறிவித்திருந்தார்.
மக்கள் பூர்வீகமாகப் பயன்படுத்தி வந்த காணிகள், இன்னும் பல காணிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1980 காலப்பகுதிகளில் பல்வேறு திட்டங்களுக்காக மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்தக் காணிகளுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது, எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவது என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது. தற்போதைய சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் காணிகளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று சனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் காணிப் பிரச்சினைகளையும், வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த வருடம் மாத்திரம் 1,500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் வீடுகள் தேவைப்படும் நிலையில் மக்கள் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே சனாதிபதியின் நிலைப்பாடாகும். அடுத்த வருடம் தேவையான நிதியை வழங்கி, 13,000 வீடுகள் தேவைப்படும் இடங்களில் அவற்றை முழுமையாக நிர்மாணித்து முடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, இனிமேல் மக்களிடையே தேவையற்ற குழப்பங்களையும், சந்தேகங்களையும், வேற்றுமைகளையும் ஏற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காகச் செயற்படும் அரசாங்கமாகவும் நாம் இருக்கின்றோம்.
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளையும் சலுகைகளையும் வழங்குவதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்குக் கிடைக்கக்கூடிய பல சலுகைகளைக் கைவிட்டு, எளிமையான வாழ்க்கை முறையைத் தெரிவுசெய்துள்ளார். சனாதிபதி மாளிகை, சொகுசு வாழ்க்கை, ஆடம்பர வாகனங்கள் உள்ளிட்ட பல விடயங்களை அவர் தவிர்த்துள்ளார்.
மக்களின் துயரங்களைத் தமது சொந்தத் துயரங்களாகக் கருதி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வேதனையைப் புரிந்துகொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து செயற்படும்.
இவை அனைத்தும் வெறும் அறிவிப்புகளுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்ல. மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்” என்றார்.















