LOADING

Type to search

இந்திய அரசியல்

5 ஆண்டுகள் ஆட்சியில் 511 வாக்குறுதிகளில் 70 மட்டுமே நிறைவேற்றம் – அண்ணாமலை

Share

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை 4 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் 511 வாக்குறுதிகளில் 70 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக உதகமண்டலம் தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற, மாபெரும் பிரசார கூட்டத்தில் உரையாற்றினேன்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது, 511 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த திமுக, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட வெறும் 70 தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் 99 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பொய் பேசி வருகிறார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் இருண்ட ஆட்சியை கொடுத்த திமுகவை, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர தமிழக மக்கள் விடமாட்டார்கள். படுகர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் அந்தஸ்து கிடைத்திட திமுக அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வருகிற மே 4 ஆம் தேதி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்தை பெற்று தர தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி. காட்டாட்சியை கட்டவிழ்த்து, உதகமண்டலத்தின் வளர்ச்சியை முடக்கிய திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் போஜராஜனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதகை மக்கள் வெற்றிப்பெற வைப்பார்கள் என்பது உறுதி.

இந்நிகழ்வில், தமிழக பாஜக நீலகிரி மாவட்ட தலைவர் அண்ணன் தருமன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.