LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

Share

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரின் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 4ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பென் குரின் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏமனின் ஹூடைடா நகரில் உள்ள துறைமுகம் மீது 5ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும், ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையம் மீது 6ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேவேளை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.