LOADING

Type to search

உலக அரசியல்

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவில் 605 அடி உயர கோபுரத்தில் பறந்த இந்திய தேசிய கொடி

Share

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நிலையில், சியாட்டில் நகரை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்த இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை அங்கீகரிக்கும் வகையில் வரலாற்று நிகழ்வு ஓன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி, சியாட்டில் நகரின் தனித்துவம் வாய்ந்த ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. 605 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படுவது வரலாற்று தருணம் ஆகும். வேறொரு நாட்டின் கொடி இந்த கோபுரத்தில் ஏற்றப்பட்டு உள்ளது இது முதன்முறையாகும். இந்திய வம்சாவளியினரில் பலரும் தேசிய கொடியின் அருகே நின்று புகைப்படங்களையும் எடுத்து கொண்டனர். இதேபோன்று கெர்ரி பார்க் பகுதியில், இந்திய தூதரகம் சார்பில் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் சியாட்டில் வான்வெளியில் உயரே பறந்த தேசிய கொடியை, கீழே இருந்து கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க நாடாளுமன்றவாதி ஆடம் ஸ்மித், வாஷிங்டன் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டெப்ரா ஸ்டீபன்ஸ், சியாட்டில் துறைமுக கமிஷனர் சாம் சோ உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க உயரதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தியாவின் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்பட்டும், கலாசார நடனம் ஆடியும் களைகட்டியது. இதனை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.