LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு நிவாரணம்

Share

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

   தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாலையிலேயே மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார். தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும் , தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என்றும், அவர்களின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.