வாழைச்சேனை கிண்ணியடியில் கசிப்பு உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாரால் முற்றுகை
Share
…1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது —
(கனகராசா சரவணன்)
வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் 21ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை பகல் முற்றுகையிட்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் 6 பெரல் கொண்ட 1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்பு என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து குறித்த பகுதிக்கு சம்பவ தினமான இன்று பகல் கிழக்கு மாகாண குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் படகு மூலம் வாவியில் பிரயாணித்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் 6 பெரல் கொண்ட 1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்பும் மற்றும் உற்பத்தி உபகரணங்களை மீட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி குழுவைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு வாவியில் பிரயாணித்த போது முதலை தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது




















