LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்கள்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Share

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.39.33 கோடி செலவிலான 146 நூலகக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

     தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்டார். மேலும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கள்ளக்குறிச்சி நகரில் 4 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட மைய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நாட்டுடைமை நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், செவ்வியல் நூல்கள், அரிய நூல்கள் வெளியீடு ஆகிய திட்டங்களின் கீழ் நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரிய நூல்கள் பிரிவில் “தமிழ்நாட்டில் காந்தி” எனும் நூலும், நாட்டுடைமை நூல்கள் பிரிவில் “தமிழர் தலைவர்” (தந்தை பெரியார்), தமிழில் சிறுபத்திரிகைகள், பாரதி நினைவுகள், பாரதியார் சரித்திரம், என் குருநாதர் பாரதியார், நான் கண்ட பெரியவர்கள் ஆகிய நூல்களும், மூத்த வரலாற்று அறிஞர்களின் தமிழ்நாட்டு வரலாறு அரிய நூல்கள் பிரிவில்– பல்லவர் வரலாறு மற்றும் மொகஞ்சதரோ அல்லது சிந்துச் சமவெளி நாகரீகம் ஆகிய நூல்களும், நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பிரிவில் டி.கே.சீனிவாசன் படைப்புலகம் என்ற நூலும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் குறட்டை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்தடை– ஒரு கண்ணோட்டம், மருத்துவ ஆராய்ச்சி முறைகளும் ஆய்வறிக்கை எழுத எளிய வழிமுறையும், ஆகிய நூல்களும், இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் ஆதியும் நடேசன் தாத்தாவும், இரட்டை முனை வாள், எழிலனின் ஆசை, சாதனை, பாட்டிக்கு என்ன பரிசு தர வேண்டும், பூத்த சிறகுகள், அவள் ஒரு தேவதை, கண்டுபிடி கண்டுபிடி, காதல், முகிலைத் தேடி ஆகிய நூல்களும், செவ்வியல் நூல்கள் பிரிவில் பரிபாடல் என்ற நூலும், என மொத்தம் 26 புதிய நூல்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 90 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 32 நூலகங்களும், நகராட்சி நிர்வாகத் துறை (நகராட்சி) மூலம் 20 நூலகங்களும், என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 31 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிலான நூலகக் கட்டடங்கள், 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள் என மொத்தம் 36 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 142 நூலகக் கட்டடங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம்,  பெரியநாயக்கன்பாளையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் 1,069 சதுரடியில் முழுநேர கிளை நூலகம், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம்-2ல் 50 இலட்சம் ரூபாய் செலவில் 1590 சதுரடியில் முழுநேர கிளை நூலகம், ஆலாம்பாளையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் 1484 சதுரஅடியில் கிளை நூலகம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் 91 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் முதல்தளத்துடன் 1,883 சதுரஅடியில் கட்டப்பட்டுள்ள முழுநேர கிளை நூலகம்; என மொத்தம் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 146 நூலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.