LOADING

Type to search

இலங்கை அரசியல்

அரசு -அநுரகுமாரவிடம் அதிகாரம்-பாதாளக்குழுக்களிடம்

Share

”2025 ஜனவரி முதல் இன்று வரை இலங்கையில் 53 பேர் சுட்டுக்கொலை.2,539.5 கிலோ ஐஸ்,1,832.8 கிலோ ஹெரோயின், 14,772.4 கிலோ கஞ்சா,32.6 கிலோ கொக்கெய்ன், 30 இலட்சம் போதை மாத்திரைகள்,600கிலோ வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றல்.ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் .ரிவோல்வர்கள் உட்பட 2,097 துப்பாக்கிகள் மீட்பு, போதைப்பொருள் தொடர்பில் 1,95,948பேர் கைது”—–கே.பாலா

”புதிய திசை” ,”மாற்றம்” என்ற கோஷங்களோடு வரலாற்று வெற்றிபெற்று இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ஒரு வருடத்தை கடக்கும் நிலையில் இலங்கை கொலைகள் மலிந்த பூமியாகவும் குற்றங்கள் பெருகும் நாடாகவுமே மாற்றம் கண்டு வருகின்றது. ”அரசு அநுரவிடம்-அதிகாரம் பாதாளக்குழுக்களிடம்”என்ற நிலைமையே இலங்கையில் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இற்றைவரை நாட்டில் 105இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன, இதனால் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், 76 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை. பெரும்பாலான கொலைகளுக்கான கூலியாக 400,000 – 500,000 ரூபா வரை மட்டுமே கோரப்படுகின்றன, சில சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைகள் செய்தவர்களுக்கு பணத்திற்குப் பதிலாக போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது .

அதுமட்டுமன்றி இலங்கையில் இந்த 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான சுமார் பத்து மாத காலப்பகுதியில், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்தக் காலப்பகுதியில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 320 சுற்றிவளைப்புகளில், போதைப்பொருள் தொடர்பில் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 948பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நடவடிக்கையின் போது, 60 இலட்சத்து 19 ஆயிரத்து 343 க்கும் அதிகமான நபர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வகைகளில், ஐஸ் போதைப்பொருளே அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .அதன்படி மொத்தமாக 2,539.5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக 66,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து, 1,832.8 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டு 58,131 வழக்குகளும், 14,772.4 கிலோ கஞ்சா மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு 58,724 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 32.6 கிலோ கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டு 91 வழக்குகளும், 30 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு 2,808 வழக்குகளும், 600கிலோ வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு 1,475வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான சுற்றிவளைப்புகளின் போது, ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்கள் உட்பட மொத்தமாக 2,097 துப்பாக்கிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பாதாள உலக்குழுக்களின் தலைவர்கள்,  உறுப்பினார்கள் பலர் உள் நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வைத்தும் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் . ஆனாலும் அநுர அரசினால் நாட்டில் கொலைகளையோ, குற்றங்களையோ, பாதாளக்குழுக்களையோ, போதைப்பொருட்களையோ கட்டுப்படுத்த முடியாதளவுக்கு இலங்கையின் அரசியலும் அரச அதிகாரமும் பாதாளக்குழுக்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

எந்த பாதாளக் குழுத்தலைவரை கைது செய்தாலும் அல்லது சுட்டுக் கொன்றாலும் அவரின் பின்னணியை ஆராய்ந்தால் அவர் ஏதோவொரு அரசியல் கட்சியுடன் நெருங்கியதொடர்பில் இருப்பவராகவும் அவருடன் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரத்தில் உயர் மட்டத்தில் உள்ள பலரும் தொடர்பு வைத்திருப்பவர்களாகவுமே உள்ளனர்.இதற்கு அண்மைய முக்கிய பாதாள உலககுழுத் தலைவர்களின் கைதுகளும் வெலிகம பிரதேச சபை தவிசாளரின் கொலையும் சாட்சிகளாகின்றன.

இலங்கை அரசியலும் அரச அதிகார உயர்மட்டமும் பாதுகாப்புத் தரப்புக்களும் எந்தளவுக்கு பாதாளஉலகக் குழுக்களோடு பின்னிப்பிணைந்து நகமும் சதையுமாக இருக்கின்றன என்பதற்கு அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான  ”முழு நாடுமே ஒன்றாக”என்ற தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார தனது உரையில்,”போதைப்பொருள் அச்சுறுத்தல் இயற்கையாக உருவாகவில்லை என்றும், அது நீண்ட காலமாகஅரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த பேரழிவு முழு சமூகத்தையும் ஆட்கொண்டுள்ளது.இதனுடன்தொடர்புபட்டதாக பாரிய நிதி வலையமைப்பு காணப்படுகிறது. ஒரு கிலோ 2 கோடி ரூபாவை விடஅதிக விலைக்கு விற்பனை செய்யும் போதைப் பொருள் உள்ளது. எமக்கு 800-900 கிலோபிடிபடுகிறது. நாட்டிற்குள் வரும் அனைத்து போதைப் பொருட்களையும் நாம் கைப்பற்றவில்லை. அவர்கள் அனுப்பும் தொகையில் சிறுதொகையே கைது செய்யப்படுகிறது.எந்தளவு தொகை விநியோகிக்கப்படுகிறது என்பது கைப்பற்றும் தொகையின் மூலம் கணிக்கலாம். கருப்புப் பொருளாதாரத்தை கட்டெியெழுப்பும் வர்த்தகமாக இது மாறியுள்ளது. அதனால்அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொருகுழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்குமற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்தகொலைகள் நடைபெறுகின்றன.

அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது. அவர்களிடையே ஆயுதங்கள் உள்ளன. அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்களை பயன்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது. அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில இராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ 56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. இராணுவ கேர்னல் ஒருவர் தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின்வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவைநிகழ்ந்துள்ளன. இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் கருப்பு ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்கள் இன்றி வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலுள்ள சிலர் சட்டவிரோத வாகனங்கள் பாவனைக்குவர பங்களித்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேசிய பாதுகாப்பிற்காக பங்களிக்கும்நிறுவனம். ஆனால் சில அதிகாரிகள் பாதாள தலைவர்களுக்கு கடவுச்சீட்டு தயாரித்துவழங்கியுள்ளனர். இவ்வாறு தான் அரச கட்டமைப்பிற்குள் இந்தப் பேரழிவு நுழைந்துள்ளது. சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தச் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அதே அளவு பலமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றை தம்பிடியில் வைத்துள்ளனர். வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கருப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அவை நுழைந்துள்ளன. சிலர் மக்கள் பிரதிநிதிகள் ஆகின்றனர். உள்ளுராட்சி தலைவர்களாக தெரிவாகின்றனர். தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிட சிலர் தயாராகி இருந்தனர். ஆட்சி அதிகாரம் , எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங் கண்டுள்ளோம். இந்த நிலை தானாக உருவானதல்ல.  நீண்ட காலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன்தான் இது உருவானது. இதன் பின்னணியில் தெளிவான அரசியல் ஆசிர்வாதம் உள்ளது. அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மறைவான அதிகாரத்தை போதைபொருள் வர்த்தகர்கள் பெறுகிறார்கள். சில அரச பொறிமுறையில் நுழைந்து விசாரணைகளை தடுக்கவும் வீதியில் சுட்டுக் கொலை செய்வதற்கும் இந்த மறைவான அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.” என்று கூறுகின்றார்.

இவ்வாறாக முன்னர் இருந்த அரசாங்கங்கள், மற்றும் பிரபல அரசியல் கட்சிகளுக்கு பாதாள உலகக் குழுக்களோடு இருந்த தொடர்புகள் போல் தற்போதைய ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசுக்கு தொடர்புகள் இல்லை என்பதனால் அவர்கள் பாதாள உலகக் குழுவை வேட்டையாடுவதில் தீவிரம் காட்டினாலும் இலங்கையில் அரசியலும் பாதாளகுழுக்களும் பிரிக்கப்பட முடியாதவையாக இருப்பதனாலும் அவ்வாறு பாதாள உலகக்குழுக்களை அழிப்பதானால் பல பிரபல அரசியல்வாதிகளிலும் அரசியல் கட்சி களிலும் கை வைக்க வேண்டி வரும் என்பதாலும் தற்போதைய அரசுக்கு பாதாள உலகக்குழுவை வேட்டையாடுவதென்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும் .

அதனால் தற்போதைய அரசும் இந்த பாதாளக் குழுக்களையும் பெருகும் குற்றங்களையும் வைத்து அரசியல் செய்து தனது ஆட்சிக் காலத்தை நகர்த்த முற்படுவதாகவே தெரிகின்றது. ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை முக்கியமான எதனையுமே இந்த அரசு நிறைவேற்றவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட அநுரகுமார அரசு நிறைவேற்றவில்லை. தாம் கொடுத்த வாக்குறுதிகளை மக்களிடமிருந்து மறக்கடிக்கச் செய்வதற்காக, சினிமாப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் மக்களை பரவசப்படுத்துவதுபோல் இந்த பாதாளஉலகக்குழுக்களின் மோதல்கள்,கொலைகள் , குற்றங்கள் , அதிரடிகைதுகளை பரபரப்பாகி ”பாதாள உலகக்குழு அரசியல் ”ஒன்றைத்தான் அரசும் முன்னெடுக்கின்றது.

இந்த ”பாதாள உலகக்குழு அரசியல் ” தந்திரத்தில் மக்களும் ஈர்க்கப்பட்டு இன்று யார் கொல்லப்பட்டார்கள்?,  இன்று யார் கைது செய்யப்படுவார்கள்? எந்த அரசியல்வாதி சிக்கப்போகின்றார்? செவ்வந்திக்கு யார் யாருடன் தொடர்பு?  செவ்வந்தி யாரைக் காட்டிக் கொடுக்கப்போகின்றார்? செவ்வந்திக்கு தமிழ் தரப்புகளுடன் தொடர்பு வந்தது எப்படி?என்பதையே தினமும் ஆராய்ந்து கொண்டும் அது தொடர்பான ஊடகங்களின் பரபரப்பு, ”பிரேக்கிங்” செய்திகளை எதிர்பார்த்துக்கொண்டும் அது தொடர்பில் விவாதித்துக்கொண்டும் இருக்கின்றனர். இதுவே இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவும் இருப்பதனால் இன்னும் சிறிதுகாலத்துக்கு இலங்கையில் ”பாதாள உலகக்குழுக்கள்” என்ற அரசினால் படமே காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அரசு தனது ஆட்சியையும் ஊடகங்கள் தமது வருமானத்தையும் பாதுகாத்துக்கொள்ள, மக்களே தொடர்ந்தும் ஏமாற்றப்படப் போகின்றார்கள்.