LOADING

Type to search

இலங்கை அரசியல்

விளக்கமறியலில் இருந்தபோது ‘கீழே வீழ்ந்து’ உணர்விழந்த சகோதரனுக்கு நீதி கோரும் சகோதரி

Share

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மாத காலத்துக்கும் மேலாக உணர்விழந்த நிலையில் இருக்கும் தனது சகோதரனுக்கு நீதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில நாட்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் ‘கீழே விழுந்ததால்’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

தனது சகோதரனின் வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றதாகக் காணப்படுவதாகவும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தன்னை தாக்கியதாக தனது சகோதரன் நவம்பர் 08ஆம் திகதி தன்னிடம் கூறியதாகவும், தற்போது கோமா நிலையில் உள்ள புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட சிவராமலிங்கம் தர்ஷனின் சகோதரியான சிந்துஜா சிவராமலிங்கம் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தி தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

“நாங்கள் நவம்பர் 11ஆம் திகதி அவரைப் பார்க்கச் சென்ற நாளில் இருந்து சுமார் ஒரு மாத காலமாக அவர் கோமா நிலையில் உள்ளார். அதனால் ஒருவரை ICU-வில் கோமா நிலையில் வைத்திருக்க முடியாது எனக் கூறி வைத்தியர்கள் அவரை சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றியுள்ளார்கள். என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது. சிகிச்சை பற்றி அவர்களால் ஒன்றும் கூற முடியாது என்று சொல்கிறார்கள். அவரின் தலையில் சில நரம்புகள் செயலிழந்து, மூளையின் ஒரு பகுதி மாத்திரமே வேலை செய்கிறது. அந்த இடத்தில் ஒரு சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாம். ஆனால் அதற்கு அவருக்கு சுயநினைவுடன் இருக்க வேண்டுமென கூறுகிறார்கள். அவரைக் காப்பாற்றுவது கடினம். அவரைக் காப்பாற்றுவது 95 சதவீதம் கடினமான காரியம் என அவர்கள் சொல்கிறார்கள்.”

நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத குற்றச்சாட்டின் அடிப்படையில் விடுக்கப்பட்ட பிடியாணை ஒன்றின் அடிப்படையில் 2025 நவம்பர் 6 ஆம் திகதி பொலிசாரால் தனது சகோரன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததை உறுதிப்படுத்திய தர்ஷனின் சகோதரி, தனது சகோதரனுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் நீதி வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இதற்கு எங்களுக்கு நீதி வேண்டும். புதுக்குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். 7 ஆம் திகதி நலமாக இருந்த ஒருவர் இப்போது கோமா நிலையில் இருக்கிறார் என்றால், இதற்கு நீதி வேண்டும்.”

என்ன நடந்தது என்பதை கீழ் வருமாறு விளக்குகிறார் சிந்துஜா:

நவம்பர் 06, 2025 – நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கொன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சிவராம்லிங்கம் தர்ஷன் பிடியாணை மூலம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 07, 2025 – முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 11 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிவராமலிங்கம் தர்ஷன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

நவம்பர் 08, 2025 (காலை) – தர்ஷன் ‘கீழே விழுந்ததால்’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அவரது குடும்பத்தினருக்கு அறிவித்தார்.

நவம்பர் 08, 2025 (மாலை) – தர்ஷனைப் பார்ப்பதற்காக அவரது சகோதரி வைத்தியசாலைக்குச் சென்றபோது, அவர் கைவிலங்கிடப்பட்டு சிகிச்சை பெறுவதைக் கண்டார். தர்ஷன் தனது சகோதரியிடம் “அவர்கள் என்னைத் தாக்கினார்கள்” எனக் கூறியதாக அவரது சகோதரி கூறுகிறார். மேலும் தொடர்ந்து பேசுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தனது சகோதரனை அனுமதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

நவம்பர் 09, 2025 – தர்ஷனின் பேச்சு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அவரது தலையை ஸ்கேன் செய்த பின்னர் அவர் சாதாரணமாக இருப்பதாகக் கூறி, அன்றைய தினம் மாலை அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நவம்பர் 10, 2025 – தர்ஷனின் தந்தை சிறைச்சாலைக்குச் சென்றபோது, மகனைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

நவம்பர் 11, 2025 (காலை) – தர்ஷன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்தனர்.