இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Share
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23.12.2025 அன்று சிறைப்பிடித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இது போன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு, மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (2024 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட) இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.




















