LOADING

Type to search

இலங்கை அரசியல்

விஷ போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான யாழ்ப்பாண மாவட்ட செயற்பாட்டுக் குழு ஸ்தாபிதம்!

Share

பு.கஜிந்தன்

“போதை இல்லாத நாடு மகிழ்ச்சியான நாளை” என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால அவர்களது பங்குபற்றுதலுடன் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைஅன்றைய தினம் (2026.01.14) ஆந் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மதகுருமார்கள், வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு ரவி செனவிரத்ன, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாடு நிகழ்ச்சித்திட்டன் கீழ் மாவட்ட செயற்பாட்டுக் குழுக்களை ஸ்தாபித்தல் கூட்டத்திற்கு வருகை தந்த மதத் தலைவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரையும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவையும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், இத் திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்றிட்டத்தை முன்னெடுக்க அனைவரும் ஒன்றுகூடி உள்ளதாகவும், முழு நாடுமே ஒன்றான திட்டமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு அதன் முதற்கட்ட செயற்றிட்டமாக மாவட்ட செயற்குழு தாபிக்கப்படுவதாகவும், பிரதேச, மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற வாக்கிற்கு இணங்க சிறுவர்களை இளைய சந்ததியினரையும் ஆரோக்கியமான நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான தேவை காணப்படுவதாகவும், அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவை செயற்படுத்த மாவட்ட மட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும், இத் திட்டத்தின் செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வு அதிமேதகு சனாதிபதி தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்து போதைப்பொருள் பாவனையை ஒழித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தை போதையிலிருந்து பாதுகாப்பதற்கான பாரிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும், ஊடகங்களும் அதற்கான பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், போதைப் பொருளை எவ்வாறாயினும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளதாகவும், இத் திட்டத்தை முன்னெடுப்பதிலுள்ள சவால்களை எதிர்கொண்டுவருவதாகவும், பாடசாலை மாணவர்களிடம் பரவியுள்ள போதைப் பொருளினையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், போதைக்கு அடிமையாகும் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும்,
போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர் எனவும், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும்,

எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்களிப்புடன் இந்த போதை ஒழிப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது எனவும், போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், இதற்கு அனைத்து அதிகாரிகளதும் பொது மக்களின் பங்களிப்பும் தேவை என்றும், இது தொடர்பான ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்து, போதைக்கு எதிரான செயற்பாட்டிற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இச் செயற்பாட்டிற்கான ஆலோசனை களையும், கோரிக்கைகளையும் பொதுமக்கள் பாதுகாப்பு கெளரவ அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு முன்வைத்தார்கள்.

இக் கூட்டத்தில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாண கடற்படைத் தளபதி, விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரி, பாதுகாப்பு படைகளின் அதிகாரி, பிரதிப் பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.