LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கைக் கல்வி அமைச்சிலும் ”ஓர்” இனப் பிரச்சினை

Share

கல்வி அமைச்சரான ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க முடியாதென எதிர்கட்சிகளை சேர் ந்த தமிழரசுக்கட்சி பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் தேசிய ஜனநாயகக்கூட்டணி போன்றவையும் ஆதரிக்காது என்றே தெரிகின்றது. அதேவேளை என்னதான் உள்வீட்டுக் கலகங்கள் .குழிபறிப்புகள் இருந்தாலும் அரசு என்ற வகையில் ஹரிணிக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜே .வி.பி.- தேசியமக்கள் சக்தி அரசு இணைந்து தோற்கடிக்கும்.எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளதன் மூலம் பிரதான எதிர்க்கட்சி மீண்டும் ஒரு தடவை மூக்குடைபடப் போகின்றது.–கே.பாலா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சி குழப்பம்,குளறுபடிகள் .குத்து வெட்டுக்கள் .உள் வீட்டுக் கலகங்கள்,பிரதமர் பதவிக்கான குழிபறிப்புக்கள் என ”நித்தம் கண்டம்…பூரண ஆயுள் ” என்றவாறாக நகர்ந்து கொண்டிருக்கின்றது .ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வெற்றியின் மூலம் பாராளுமன்றத்தேர்தலில் 159 ஆசனங்கள் என்ற வரலாற்று வெற்றியுடன் தேசிய மக்கள் சக்தி அரசு அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம்,அரிசி,தேங்காய்,குரங்கு,உப்பு,பாதாள உலகம்,படு கொலைகள்,சர்வாதிகாரம்,இந்திய பிரதமரின் வருகை ,ஜனாதிபதியின் இந்திய,சீன விஜயங்கள், சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி,வடக்கு காணி சுவீகரிப்பு, சட்டவிரோத கொள்கலன்கள் விடுவிப்பு,திருகோணமலை புத்தர்சிலை,சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரை,.டித்வா புயல் பேரழிவுகள்,அதற்கான நிவாரண அறிவிப்புகள் என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது.

இது போதாதென்று தற்போதைய அரசு மேற்கொள்ளவுள்ள கல்வி மறு சீரமைப்பு எதிர்க்கட்சிகளின் ,பிரபல பிக்குகளின் கடும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளான நிலையில் 6 ஆம் தர ஆங்கில பாடப் புத்தக மாதிரியில் ஏற்பட்டுள்ள அல்லது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய தவறு ஒன்று அரசை மட்டுமன்றி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பதவிக்கும் பெயருக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. அதன் விளைவாக தற்போது பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ளதுடன் கல்வி அமைச்சர் அரச எதிர்ப்பு சமூக வலைத்தளங்களினால் கடுமையாகவும் இழிவாகவும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

தரம் 6 ஆங்கில பாடநூல் அச்சிடுதலில் ஏற்பட்ட ஒரு ”பாரிய தவறு”மிகவும் மலிவான சந்தர்ப்பவாத அரசியலுக்கான வாசலைத் திறந்துவிட்டுள்ளது.சந்தர்ப்பவாத அரசியலில் இலாபம் தேட முயல்பவர்களுக்கு, இந்தத் தவறு வெறும் ஒரு நிர்வாகச் சீர்கேடு மட்டுமல்ல.அது ஆட்சி மாற்றத்துக்கான ஆசையைத் தூண்டி விடும் ஓர் ஆயுதமாகவும் அரசு பக்கத்தில் பிரதமர் பதவி ஆசையில் இருப்போருக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போன்றும் மாறியுள்ளது . பாராளுமன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் பிரதமரான கல்வி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிரொலிக்கின்றன . ஹரிணி அமரசூரிய மிகக் கேவலமாக விமர்சிக்கப்படுகின்றார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட பொது வெளியில் விவாதிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சரான ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் சர்ச்சை ,தரம் 6 ஆங்கில பாடநூலில் மாணவர்கள் கலந்துரையாடும் பாடக்குறிப்பு ஒன்றில் அச்சிடப்படுள்ள இணையத்தள ‘முகவரி’ குறித்ததாகவே உள்ளது. அந்த இணையத்தள முகவரி ஓரின சேர்க்கையாளர்களின் அந்தரங்க ,ஆபாச இணையத்தள முகவரியாகும். அநுரகுமார அரசிலும் ஆட்சியிலும் இருக்கும் முக்கியமான ஆண்கள், பெண்கள் சிலர் ”ஓரின சேர்க்கையாளர்கள்” என்ற குற்றச் சாட்டுகளுக்குள்ளாகியுள்ளதுடன், ,பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணியும் ஒரு ‘லெஸ்பியனாக’ அதாவது ஓரினசேர்க்கையாளராக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்தான் அந்த கலாசாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன் தரம் 6 ஆங்கில பாடநூலில் அந்த ”முகவரி ”திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ளது என்பதே குற்றச்சாட்டாகவுள்ளது

தான் ஒரு லெஸ்பியன் என ஹரிணி எந்த இடத்திலும் பகிரங்கமாக கூறியிருக்கவில்லை.அவரை நெருக்கமாக அறிந்து வைத்திருப்பவர்கள் பலரும் ‘அவர் அப்படியானவர் அல்ல’ என்று அடியோடு மறுக்கின்றார்கள். அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் அவர் அப்படி நடந்து கொண்டாலும் கூட – பிரதமர் பதவிக்குள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி அல்லது வலுக்கட்டாயமாக யாரையும் அதில் ஈடுபடுத்தி தனது பாலியல் இச்சைகளை அவர் நிறைவேற்றிக் கொள்ளாத வரையில் அது நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து விட முடியாது.

சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக ‘அந்தத் தவறுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்’ எனக் ஹரிணி திட்டவட்டமாக கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்புகள் ஒரு சில பிரபல பிக்குகள் , சில அரச எதிர்ப்பு யூடியூபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒரு தலைப்பு தொடர்பான விவாதமும், உரையாடலும் பிழையான நபர்களின் கைகளுக்கு போனால் என்ன நடக்கும் என்பதற்கு தற்போது பிரதமர் ஹரிணி தொடர்பான இந்த ”முகவரி சர்ச்சை” சிறந்த உதாரணமாகவுள்ளது.

பிரதமர் ஹரிணி மீது நடந்து வரும் தனிநபர் தாக்குதலை எதிர்த்து பெண்ணியவாதிகள் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை. அப்படிகொடுத்தால் தம்மையும் ஹரிணியுடன் இணைத்து விடுவார்களோ என்ற அச்சமும் இதற்கு ஒரு காரணமாகவுள்ளது . அரசாங்கத்தின் மீதான வன்மத்தை கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக இது எதிர்க்கட்சிகளுக்கு வாய்த்திருப்பதால் எதிர்க்கட்சிகள் மிகவும் தந்திரமான விதத்தில் தமது பினாமிகளை களமிறக்கி, இந்த சேறுபூசலை ,கீழ்த்தரமான விமர்சனங்களை, குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் ஹரிணிக்கு எதிராக பல பெண் புத்திஜீவிகளும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண் என்ற ரீதியில் தற்போது கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டும் விமர்சிக்கப்பட்டும் பதவி விலக வலியுறுத்தப்படும் பிரதமரும் கல்வி ,உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய ஒன்றும் சாதாரணமானவரல்ல. அவர் அரசியல் குடும்பத்திலிருந்து செல்வாக்கினால் பதவிகளுக்கு வந்தவருமல்ல. 6 மார்ச் 1970 இல் பிறந்த ஹரிணி அமரசூரிய இலங்கை கல்வியாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார் .டில்லிப் பல்கலைக்கழகத்தின் டி ல்லி, இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்று சமூகவியலில் இளங்கலைப் பட்டமும், அவுஸ்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானிடவியலில் முதுகலைப் பட்டமும், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியலில் கலாநிதி பட்டமும் பெற்றவர்.

இளைஞர்கள், அரசியல், கருத்து வேறுபாடு, செயல்பாடு, பாலினம், வளர்ச்சி, சமூக உறவுகள், குழந்தைகள் பாதுகாப்பு, உலகமயமாக்கல், மேம்பாடு ஆகிய துறைகளில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டவர் . பல ஆண்டுகள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் பயிற்சியாளராகப் பணியாற்றிய பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக இணைந்து கொண்டவர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பில் உறுப்பினராகி, இலவசக் கல்விக்காகப் போராட்டங்களில் கலந்துகொண்டவர். பாலின சமத்துவம், LGBTQ+ உரிமைகள், ஆகியவற்றிற்காக வாதிட்டவர்.

இவர் கருத்தியல் ரீதியாக மைய-இடதுசாரியாகவும், தாராளவாதியாகவும் இருந்தார் . இவர் இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு, இலங்கை கல்வி முறையின் திறமையின்மை ஆகியவை பற்றிய தனது ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையை நாம் அகற்ற வேண்டும். கல்வி மிகவும் அனுபவபூர்வமாக இருக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்களின் கலாசாரம் மாற வேண்டும். பாலினம், மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரிந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்க வேண்டாம். மாறாக அங்கெல்லாம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்.மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். கல்விக்கு அரசு முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவர்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான ஹரிணி, 2020 ஆம் ஆண்டுமுதல் முதல் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இந்த வாக்கு எண்ணிக்கை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய வாக்கு எண்ணிக்கையாகும். இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர் 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த எண்ணிக்கையை ஹரிணி அமரசூரிய முறியடித்து இலங்கை அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதியவர் .சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோருக்குப் பின்னர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.

இவ்வாறான ஒரு பலமான கல்விப் பின்புலத்தையும் தூர நோக்கு சிந்தனைகளையும் கொண்ட ஹரிணியை, தேசிய கல்வி நிறுவகத்தின் அச்சுப் பிழைக்காக இராஜிநாமா செய்ய எதிர்க்கட்சிகள் கோருவது, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது மலிந்த சந்தர்ப்பவாத அரசியல் . ஒரு கட்டமைப்பு ரீதியான நிர்வாகப் பிரச்சினைக்கு ஒரு தனி நபரைப் பலி எடுக்க முயற்சிக்கின்றனர் ஹரிணி அமரசூரிய கல்வியை மறு சீரமைக்க முயன்றதுதான் இந்தளவு குற்றச்சாட்டுக்களுக்கும் கீழ்த்தரமான எதிர்க்கட்சிகளின் ,பிக்குகளின் விமர்சனங்களுக்கும் காரணம்.மாணவர்கள் எதைக் கற்கிறார்கள், அவர்களை பரீட்சை மையக் கலாசாரத்திலிருந்து திறன் சார்ந்த கலாசாரத்திற்கு மாற்றுவது என்பன போன்ற மிக அடிப்படையான கல்விச் சீர்திருத்தங்களில் அவர் கவனம் செலுத்தியதை இவர்கள் குற்றமாக காண்கின்றனர் .ஓர் அச்சுப் பிழையை காரணமாக வைத்துக்கொண்டு நாட்டிற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்பை தடுக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்

இதற்கு எதிர்கட்சிகளை மட்டும் குற்றம் சாட்டி விட முடியாது. பிரதமர் பதவிக்கு கண் வைத்திருக்கும் ஜே .வி.பி.அணியை சேர்ந்த முக்கியமான ஒரு அமைச்சரும் அவருக்கு விசுவாசமான ஒரு குழுவும் பிரதமருக்கு எதிராக குழி பறிக்கும் வேலைகளை, அவருக்கு நெருக்கடிகளைக் கொடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலக வைக்கும் சதிகளையும் செய்து வருகின்றனர்.அதன் ஒரு கட்டமாக 6 ஆம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் போடப்பட்டுள்ள அந்த”முகவரி” கூட இந்தக் குழுவினால் திட்டமிட்டு போடப்பட்டிருக்க முடியும் என்பதனையும் நிராகரித்து விட முடியாது.

6 ஆம் தர ஆங்கில பாடநூலில் இடம்பெற்ற அந்த ”முகவரி” தவறு மன்னிக்க முடியாதது, ஆனால் அதன் மீதான எதிர்க்கட்சிகள், பிக்குகள், அரச எதிர்ப்பு சமூக ஊடகங்களின் எதிர்வினையாற்றல் முற்றிலும் நேர்மையற்றது. எனவே பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் , பிக்குகள் ,அரச எதிர்ப்பு சமூக ஊடகங்களின் எதிர்ப்புகள் ,விமர்சனங்கள் அவர் ஒரு பெண் என்ற அடிப்படையில் மிகவும் கீழ்த்தரமாக அமைந்துள்ளதால் மறுபக்கம் ஹரிணிக்கான ஆதரவும் பெருகிவருகின்றது .

அதனால்தான் கல்வி அமைச்சரான ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க முடியாதென எதிர்கட்சிகளை சேர் ந்த தமிழரசுக்கட்சி பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் தேசிய ஜனநாயகக்கூட்டணி போன்றவையும் ஆதரிக்காது என்றே தெரிகின்றது. அதேவேளை என்னதான் உள்வீட்டுக் கலகங்கள் .குழிபறிப்புகள் இருந்தாலும் அரசு என்ற வகையில் ஹரிணிக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜே .வி.பி.- தேசியமக்கள் சக்தி அரசு இணைந்து தோற்கடிக்கும்.எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளதன் மூலம் பிரதான எதிர்க்கட்சி மீண்டும் ஒரு தடவை மூக்குடைபடப் போகின்றது.