“மை லார்ட்” படம் என்னை நிறைய யோசிக்க வைத்தது – இயக்குனர் மாரி செல்வராஜ்
Share
ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஆச்சார் நடிப்பில் உருவான மை லார்ட் படம் வரும் 13ம் தேதி வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ், விஜய் மில்டன், லிங்குசாமி, உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “‘மை லார்ட்’ திரைப்படத்தைப் பார்த்து முடித்ததும் என் உதவி இயக்குநர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தேன். எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது. இப்படத்தின் முடிவு என்னை நிறைய யோசிக்க வைத்ததுடன் தர்க்கப்பூர்வமாக அசைத்துப் பார்த்தது. உச்சக்கட்டம் சரியா? இல்லை, தவறா? என இரவு முழுவதும் பேசினோம். நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம் இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம். எழுத்தாளனாக ராஜுமுருகன் இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர். ராஜுமுருகனுக்கு தமிழ் சினிமா எப்போதும் கடமைப்பட்டிருக்கும். நடிகர் சசிகுமாரால் மட்டும்தான் இப்படியான படங்களில் நடிக்க முடியும். நல்ல கதையை எழுதுபவர்களிடம் எல்லாம் சசிகுமார் இருக்கிறார். தைரியமாக எழுதுங்கள் என்றுதான் சொல்வேன். ராஜுமுருகன் இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.




















