LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் என தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள குற்றச்சாட்டு!

Share

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார். இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் செய்ததாக தமிழக, கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழா குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நாங்கள் ஆரம்பத்தில் கச்சதீவுக்குள் உள்நுளையும் போது அங்கிருந்த கடற்படை மற்றும் பொலிசார் வரம்பு மீறி செய்யப்பட்டனர். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். இதன் போது எனக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை கூட ஏற்பட்டது.

இதன்போது இந்திய தூதரகத்துடன் நான் பேச முயற்சித்தாலும் பின்னர் அங்கிருந்த சூழ்நிலையுயும், ஏனையோரது நிலையையும் கருத்தில் கொண்டு சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றோம். திரும்பி வரும்போதும் அதே மாதிரியான சூழ்நிலையே ஏற்பட்டது. அங்கிருந்த சிறு வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நிலையை கடைப்பிடித்தார்.

பலர் மயக்கமுறுகின்றார்கள், மூச்சு திணறல் ஏற்படுகின்றது எனவே மக்களை சிறிது நேரம் கடற்கரையில் பரவலாக அமர்ந்திருப்பதற்கு அனுமதிக்குமாறு இளைஞர்கள் கடற்படையிடம் கோரியவேளை இந்த முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது வயதில் குறைந்த கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களை தாக்கினார்.

பின்னர் இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அங்கு வந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் நிலைமையை சமாளித்து மக்களை கடற்கரையில் உட்கார அனுமதித்தார்.

கச்சதீவு திருவிழாவானது வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் சில குளறுபடிகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன.

இந்திய பக்தர்கள் உள்நுழையும்போது அங்கே நான்கு வழிகளே காணப்படுகின்றன. அங்கே பெருமளவான கூட்டம் வரும்போது அதனை சமாளிக்க கூடிய நிலைமை காணப்படவில்லை.

திருவிழா முடிந்து திரும்பும் போதும் பிரச்சினை ஏற்பட்டது. திருவிழாவிற்கு வந்த அதிகாரிகள், விருந்தினர்கள் என அனைவரும் செல்லும்வரை மக்கள் அங்கே ஓரிடத்தில் மறித்து வைக்கப்படுகின்றனர். அவர்கள் கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் கப்பல்களில் திரும்பி செல்கின்றனர். ஆகையால் அவர்களின் பாதுகாப்பு கருதியே மக்கள் இவ்வாறு மறித்து வைக்கப்படுகின்றனர். இதனால் 10 தொடக்கம் 12 மணிவரை மக்கள் கடுமையான வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் மணிக்கணக்காக இருக்கும்போது அங்கு காற்று வசதியும் இல்லாத காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இருப்பினும் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

மீள்திரும்பும் போது 12 மணிவரை தடுத்து வைக்கின்ற அந்த முறையை சற்று பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் தனித்தனியாக வழியை பிரித்து விட்டால் அவர்கள் அவர்களது பாதையில் இலகுவாக செல்வார்கள்.
இந்த விடயத்தில் இந்திய அரசும் இலங்கையின் வெளியுறவுத் துறையும் கரிசினை செலுத்தி, அடுத்த ஆண்டு இதே பிரச்சினை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் நிர்வாக பிரச்சினையாகவே காணப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்யும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏற்பாட்டுக் குழுவானது நிர்வாக முறைகளை சீர் செய்ய வேண்டும் என்றார்.