LOADING

Type to search

இந்திய அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கார்கேவிடம் ஒப்படைப்பு

Share

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கூட்டணி கூட்டாளிகளாக இருக்கும் கட்சிகள் தி.மு.க.வும், காங்கிரசும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும். ஆட்சி, அதி காரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்ததால் நெருடல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, வடமாநிலங்களில் ஏற்பட்ட படிப்பினைகளை அடிப்படையாக கொண்டு முன்கூட்டியே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. இதற்காக கிரீஷ்சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகிய ஐவர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த நவம்பர் 3-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை குழுவை அமைத்து இரு கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தான் குழு அமைக்கப்படும். அதன்படி குழு அமைப்பதற்கு அவசரமாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கிறோம். தி.மு.க. தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவ்வப்போது காங்கிரஸ் வேதனையை வெளியிட்டு வந்தது. இதற்கிடையில் காங்கிரசின் பிரதான கோரிக்கையான ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுப்பது தமிழ்நாட்டில் சாத்தியமில்லாதது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த நிலையில் 85 நாட்களுக்கு பிறகு தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவை கடந்த மாதம் 22-ந்தேதி அமைத்தது. குழு அமைத்ததும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதற்கிடையில் தி.மு.க. மேலிடம் டில்லி காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்வப்போது பேசி வந்தது. காங்கிரசின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லி சென்று ராகுல் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனாலும் எந்த சமரசமும் ஏற்படவில்லை. எனவே பேச்சுவார்த்தை நடைபெறுவதும் தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி திடீரென்று காங்கிரஸ் குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அண்ணா அறிவாலயத்தில் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, 39 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. இதை கிரீஷ் சோடங்கர் தி.மு.க.விடம் தெளிவுப்படுத்தினார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்ததும் செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் 2 நாளில் உடன்பாடு ஏற்படும் என்றும் கூறினார். ஆனால் கிரீஷ் சோடங்கரோ எங்கள் விருப்பங்களை தெரிவித்து உள்ளோம். தி.மு.க. தரப்பில் 25 தொகுதிகளுக்கு மேல் தர முன்வரவில்லை என்றார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எம்.பி. கனிமொழி, செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கார்கேவிற்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.