அல் கெமனியின் படுகொலை மற்றுமொரு ஒரு யுத்த அத்தியாயத்தின் ஆரம்பமா?
Share
மொசாட்டின் வெற்றியா? ஈரானிய உளவு அணியின் தோல்வியா?
தாக்குதல்களின் முக்கிய குறிக்கோளாக விளங்கிய , ஈரானின் அதியுச்ச தலைவராகவும் மற்றும் ஆன்மீக தலைவராகக் கருதப்படும் சுப்ரீம் லீடர் அல்கமேனி அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஈரான் அரசு 40 நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்து, அவருக்கான இறுதி அஞ்சலிகளை அரச மரியாதையுடன் நடத்தி வருகிறது. மேலும், பழிவாங்கும் உறுதியை வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர்,ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிராந்திய ரீதியாக பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதன் பின்னணியை ஆராய்ந்தால் சுமார் 35ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானின் சுப்ரீம் லீடராக பதவி வகித்த அல்கமேனி அவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டினால் சர்வதேச அரசியல் அரங்கில் முக்கிய பாத்திரமாகக் காணப்பட்டவர். பல அமெரிக்க ஜனாதிபதிகளைத் தாண்டியும் அதிகாரத்தில் தொடர்ந்த அவர்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான சவாலான குரலாக இருந்து வந்தார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டி வந்திருக்கிறார். இந்நிலையில், அவரின் படுகொலை எவ்வாறு நிகழ்ந்தது? எந்தத் திட்டத்தின் கீழ் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது? என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
அல் கமேனியின் முடிவு பற்றி ஈரான் சற்றும் எதிர்பார்த்திரா நேரத்தில் மிக நேர்த்தியாக அதிரடியாக அவரை முடித்திருக்கிறது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு. இது மொசாட் மற்றும் CIA களின் வெற்றியாகவும் ஈரானிய உளவி பிரிவின் தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது.
தாக்குதல்களை ஈரான் எதிர்பார்க்காமல் இருந்தமைக்கு பல தர்க்க ரீதியான காரணங்களை ஈரான் கொண்டிருந்தது. அது தான் அவர்களின் இழப்புக்கு காரணமாகி விட்டிருக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இஸ்ரேலில் தங்கி இருந்தார். அவருக்கு அங்கு உயரிய மரியாதைகள் வழங்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சிறப்பு கௌரவமும் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், அது நோன்பு காலமாக இருந்ததால் அந்த நேரத்தில் தாக்குதல் நடைபெறாது என்ற நம்பிக்கையும் ஈரான் தரப்பில் இருந்திருக்கலாம்.அதேபோல், இந்திய பிரதமர் இஸ்ரேல் மண்ணில் இருக்கும் தருணத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்ற அரசியல் கணிப்பும் இருந்திருக்கலாம். இதனால், உடனடி போர் நடவடிக்கைகள் இருக்காது என்ற மனநிலையே உருவாக்கப்பட்டிருந்ததாக இராணுவ வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
ஆனால், இப்படியான சமிஞைகளை வெளிப்படுத்தி கொண்டு இந்த எல்லா சூழ்நிலைகளும் ஒரு திரைமறைவு அரசியல் தந்திரமாக பயன்படுத்தப்பட்டதாக ஓர் போரியல் தந்திரமாக இஸ்ரேல்- அமெரிக்காவால் இணைந்த தாக்குதலாக நிகழ்த்தப்படிருபது வெளிப்படையாக தெரிகிறது.
பிராந்தியத்தில் எந்த பதற்றமும் இல்லை என்ற மாய தோற்றத்தை உருவாக்கி,அதற்கிடையில் திடீர் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அதன் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் அல்கமேனி அவர்கள் மிகத் துல்லியமான ஏவுகணை தாக்குதலால் கொல்லப்பட்டார்.
பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு பதுங்கு குழியிலிருந்தபோதும், அந்த பாதுகாப்பை ஊடுருவி சென்ற ஏவுகணைகள் இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை மற்றும் அமெரிக்காவின் CIAஉளவுத்துறைக்கு மிகத் துல்லியமான தகவல்கள் கிடைத்திருந்திருக்கிறது குறிப்பாக, உச்ச தலைவர் கமெனி எப்போது எங்கு இருப்பார், அவரின் அன்றாட அசைவுகள் என்ன என்பதற்கான தகவல்கள் மிகவும் நுணுக்கமாக சேகரிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் உள்நாட்டுக்குள் இருந்து தகவல்கள் வெளியேறியிருக்க வாய்ப்பு உள்ளதா? உளவுத்துறை ரீதியாக எவ்வாறு ஊடுருவல் நடைபெற்றது? என்பது தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உள்நாட்டு மட்டத்திலேயே தகவல் கசிவுகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது பல்வேறு தரப்புகளில் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக,ஈரானுக்குள்ளிருந்தே சில தகவல்கள் வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது. கமெனியின் அத்தனை அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு இருக்கின்றன ஆக அவர் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே கருப்பாடுகள் அல்லது மொசாட்டின் ஆழமான ஊடுறுவல் இருந்துருக்கிறது.
மேலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில்,அல் கமெனி அவர்கள் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்தார் என்ற தகவலை ஆரம்பத்தில் ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. முதன்முதலில் இந்தச் செய்தியை அறிவித்தவர்கள் அமெரிக்காவின் முன்னாள் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகு ஆவார். இருவரும் தனித்தனியாக அவர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதியான வகையில் அறிவித்தனர்.
ஆரம்பத்தில் இந்த தகவலை மறுத்த ஈரான் பின்னர் இடிபாடுகளுக்குள் இருந்து உடலை மீட்டெடுத்து உறுதிப்படுத்திய பின்னரே மிகவும் சோகமான செய்தி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் உலகத்திற்கு அறிவித்திருந்ததன் பின்னணியில், தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கான உறுதிப்படுத்தல்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.அதாவது தாக்குதல் முடித்து கமெனி கொல்லப்பட்டது ஒளிப்படம் வாயிலாகவோ என்னவோ உறுதிப்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.
தாக்குதல் இடம்பெற்ற பின்னர், சம்பவ இடத்தின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், அவர்களின் புலனாய்வு அமைப்புகள் ஈரானுக்குள் எவ்வளவு ஆழமாக செயல்பட்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ராஜதந்திரம், உளவுத்துறை நடவடிக்கைகள்,மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் ஆகியவை ஆழ்ந்த அரசியல் ஆய்வுக்குரிய விடயங்களாகும்.
ஈரானின் உச்ச தலைவராக இருந்து,அமெரிக்காவுக்கு திறந்த சவால் விடுத்தவராகக் கருதப்பட்ட ஒருவரின் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு வலுவாக இருந்திருக்க வேண்டியது. அந்த பாதுகாப்பை மீறி, அவரின் அன்றாட அசைவுகள் வரை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, சரியான தருணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறதே என்றால் அது அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைகளின் திட்டமிட்ட செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. மொசாட்டின் வெற்றியாகவும் இதே நேரத்தில், இது ஈரானிய உளவுத்துறை அமைப்பின் கடுமையான தோல்வியாகவும் மதிப்பிடப்படுகிறது.
உச்ச மட்ட பாதுகாப்பு சூழலில் இருந்த ஒருவரின் தகவல்கள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு எவ்வாறு சென்றன என்பது எதிர்காலத்தில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
ஒரு நாட்டின் உச்ச தலைவரை பாதுகாப்பது என்பது சாதாரண பாதுகாப்பு நடைமுறை அல்ல. அது பல அடுக்குகள் கொண்ட உளவுத்துறை, எதிர்-உளவு அமைப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு செயல்முறைகளின் ஒருங்கிணைப்பாக அமையும். இந்தச் சம்பவத்தின் பின்னணியை பார்க்கும்போது அந்த பாதுகாப்பு வளையத்தில் எங்கு தவறு ஏற்பட்டது என்பதே முக்கியமான கேள்வியாகிறது.ஈரானின் உளவு அமைப்பின் ஓட்டைகளை இவை காட்டுகின்றது.
கமெனியின் மறைவுக்கு பின் ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் இராணுவ நிலைகள் மற்றும் அயல் நாட்டு அமெரிக்க தளங்கள் உள்ள நாடுகளின் பொருளாதார மையங்களை குறிவைத்திருந்தாலும் உச்ச தலைவரை இழந்துள்ளமை அவர்களுக்கு மிகப்பெரிய மனரீதியான மற்றும் அரசியல் தாக்கமாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் தலைமைச் சின்னமாகக் கருதப்படும் நபர் இழக்கப்பட்டிருப்பது எந்த பதிலடி தாக்குதலாலும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
ஈரான் ஒருபோதும் அல்கமேனி அவர்களை நேரடியாக இலக்கு வைப்பார்கள் என்று கணித்திருக்க வாய்ப்பில்லை என்றே பலர் கருதுகின்றனர். குறிப்பாக, சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த சூழலில் அத்தகைய நேரடி தாக்குதல் நடக்காது என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இஸ்ரேலில் தங்கி இருந்த காலகட்டத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் ஒப்பீட்டளவில் அமைதியாக இருக்கும் என்ற அரசியல் கணிப்பும் ஈரான் தரப்பில் இருந்திருக்கலாம். இத்தகைய மதிப்பீடுகளே பாதுகாப்பு கணிப்பில் ஒரு பெரிய தவறாக மாறியிருக்கலாம்.
இந்தச் சம்பவம் மொசாட் உளவுத்துறையின் திட்டமிட்ட வெற்றியாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, ஈரானிய உளவுத்துறையின் கடுமையான தோல்வியாகவும் மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்திய பின்னரே அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து திடமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. உடல் மீட்பு மற்றும் இடிபாடுகள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்பதும் குறிப்பிடப்படுகிறது.
இது உளவுத்துறை திறன் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து அரசியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்தப் போராட்டத்தில் ஈரானின் இறையாண்மை மீறப்பட்டதாக கூறப்படலாம். ஆனால் போரியல் உத்தி ரீதியாக, பிராந்தியத்தில் எந்தத் தாக்குதலும் நடைபெறாது என்ற நம்பிக்கையை உருவாக்கி, பாதுகாப்பான சூழல் என்ற தோற்றத்தை காட்டி, பின்னர் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ஒரு தந்திரமான ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது, அரசியல் ரீதியாக அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைமை என்ற வெளிப்படையான மாய தோற்றம் உருவாக்கப்பட்டபோதிலும் அதன் பின்னணியில் திட்டமிட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில், போர் நடவடிக்கைகள் பொதுவாக அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அல்லது அறிவிப்புகளுக்குப் பிறகே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடும் உள்ளது. இச்சம்பவத்தில், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுவதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகள் மிக நுணுக்கமாகவும் திட்டமிட்ட வகையிலும் செயல்பட்டிருக்கின்றன என்ற மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் பழிவாங்கும் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு கொடியை ஏற்றி இருப்பது கவனிக்கத்தக்கது. உச்ச தலைவரை இழந்ததன் பின்னர், தலைமையற்ற நிலை ஏற்பட்டு படைகள் சிதறிவிடும் என சிலர் கருதியிருக்கலாம். வரலாற்றுப் போர்களிலும் இலக்கியப் பின்னணிகளிலும் கூட ‘தலைமையை இலக்கு வைத்தால் படை பலவீனமடையும்’ என்ற உத்தி காணப்படுகிறது.
ஆனால், அல்கமேனி அவர்கள் தமக்குப் பின்னர் பொறுப்பேற்கும் தலைமைக் கட்டமைப்பை முன்கூட்டியே வடிவமைத்திருந்ததாக கூறப்படுகிறது. உயர்மட்டத் தலைமை அல்லது தளபதிகள் உயிரிழந்தால் அடுத்த கட்ட கட்டளை யாருக்கு செல்ல வேண்டும் என்ற தெளிவான அமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்,உடனடி தலைமையற்ற குழப்பம் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்கலாம்.
தற்போது ஈரான் 40 நாள் துக்க தினத்தை அனுசரித்து வருகிறது. இறுதி அஞ்சலிகள் நிறைவடைந்த பின், ஈரான் எவ்வாறு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது. இதேவேளை, சீனா தனது ஆதரவை ஈரான் சார்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் இஸ்ரேல் -அமெரிக்க கூட்டுக்கும் அவர்கள் சார்ந்த நட்பு நாடுகள் ஆதரவை தெரிவித்து நிற்கின்றன.
மொத்தத்தில் பார்க்கும்போது, ஈரானின் உச்ச தலைவரின் உயிரிழப்புடன் இந்தச் சம்பவம் முடிவடைந்ததாக கூற முடியாது. மாறாக,அந்த நிகழ்வின் பின்னரே புதிய அரசியல் மற்றும் ராணுவ அத்தியாயம் தொடங்கியிருக்கிறது என்றே பலர் கருதுகின்றனர். இது மூன்றாம் உலகப்போருக்கான பாதையைத் திறக்குமா? எந்த நாடுகள் எந்த அணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது? உலக பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமையில் என்ன விளைவுகள் ஏற்படலாம்? போன்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.
மொத்தத்தில் அல் கமெனியின் முடிவு ஓர் முடிவல்ல அது ஏதோ ஒன்றுக்கான தொடக்கம்.
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc
அரசியல் ஆய்வாளர்




















