இலங்கையின் வடக்கில் உருவான ”மத்திய கிழக்கு”
Share
”வடக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருளை மீட்பதற்கான தேடுதல் வேட்டையை பொலிஸார் ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்கான லீற்றர் எரிபொருட்களை மீட்டு வடக்கு மாகாணத்திற்கு இன்னும் 6 மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விநியோகிக்கலாம். மத்திய கிழக்கில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”—கே.பாலா

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் மத்திய கிழக்கில் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் எண்ணெய்க்கிணறுகள் பற்றியெரிந்துவருவதுடன் ஆகாய ,கடல்பாதைகளும் மூடப்பட்டுவருவதனால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு,விலையேற்றம், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்பட்டு முழு உலகும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது.
எரிபொருளுக்காக உலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளிலேயே தங்கியுள்ள நிலையில் தற்போதைய போர் சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் தட்டுப்பாடுகளையும் விலையேற்றங்களையும் ஏற்படுத்துவதன்மூலம் உலக நாடுகளின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. .இவை வெறுமனே உலக நாடுகளுக்கு எரிபொருள் செலவினை மாத்திரம் அதிகரிக்காது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.இதனால் உள்ளூர் உற்பத்திகள் முதல் வெளிநாட்டு உற்பத்தி என அனைத்திலும் பாரிய தாக்கம் ஏற்படும்.
தற்போதைய போர் நெருக்கடியினால் உலக நாடுகள் தங்களது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெருமளவு அந்திய செலாவணியை செலவிட நேரிட்டுள்ளது .இவை மக்களின் அடிப்படை வாழ்க்கை செலவை அதிகரித்துள்ளதுடன் எரிபொருள், எரிவாயு விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளூர் பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது..அதிக தொகையை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் உலக நாடுகள் உள்ளூரிலும் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளன.எரிபொருள் அதிகரிப்பு நாட்டின் உற்பத்தி முதல் சேவைத்துறை என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இலங்கையையும் மோசமாகப் பதித்துள்ளது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்படும் கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில விமானப் போக்குவரத்து பாதைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக செல்லும் பாதைகள் உள்ளிட்ட முக்கிய கடல்சார் போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளதால், சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் குறையும் போது ஏற்படும் விலை அதிகரிப்பை இலங்கையினால் கட்டுப்படுத்த முடியாது. இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் திடீரென கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உச்சமட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன.வழமையாக ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதிகளில் எரிபொருள் கட்டண மறுசீரமைப்புக்கமைய எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படும் .அதுவும் 2 அல்லது 3 ரூபா என்ற அளவிலேயே அதிகரிப்புகள் இருக்கும். ஆனால் தற்போது உலகச் சந்தையில் அதிகரித்துள்ள மசகு எண்ணெய் விலையேற்றத்தை தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாதவாறு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெற்றோலின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 317 ரூபாவாகும். அத்துடன் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 365 ரூபாவாகும்.இதேவேளை ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 303 ரூபாவாகும். ஒரு லீற்றர்லங்கா சுப்பர் டீசலின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 353 ரூபாவாகும்.அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர்ஒன்றின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.இவ்வாறான நிலைமையினால் தெற்காசிய நாடுகளில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படுவதற்கான நிலைமைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த எரிபொருட்கள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கையில் போக்குவரத்து அனைத்து அத்தியாவசிய சேவைகள், அத்தியாவசிய தேவைகளின் கட்டணங்கள் கண்மூடித்தனமாக அதிகரிக்கப்பட்டு வருவதுடன் கறுப்புச்சந்தை மாபியாவும் மீண்டும் உருவாகியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. சீனி, தேங்காய் எண்ணெய் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு விலையேற்றம் செய்யப்படுகின்றன .
குறிப்பாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமறுநாளே ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 10 முதல் 15 ரூபாவினாலும், ஒரு கிலோ பருப்பின் விலை 20 முதல் 25 ரூபாவினாலும், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை 40 முதல் 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதேவேளை இன்னும் விலை அதிகரிப்பை செய்யும் நோக்கில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன .
இலங்கையர்களைப் பொறுத்தவரையில் அதிலும் நம்மவர்களான தமிழர்களை பொறுத்தவரையில் எதில் உஷாராக இருக்காது விட்டாலும் பொருட்கள் சேமிப்பில் அதிலும் எரிபொருட்கள் சேமிப்பில் அவர்களை அடித்துக்கொள்ள வேறு யாராலும் முடியாது. அதனால் நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து வடக்கு,கிழக்கில் வரிசைகளில் நின்று எரிபொருள் சேமிப்பில் ஈடுபட்டு தமது வீடுகளை எரிபொருள் கிணறுகள் உள்ள குட்டி ஈரான் .ஈராக் நாடுகளாக மாற்றி வருகின்றனர். .
ஈரான் மீது முதலாவது ஏவுகணைத் தாக்குதல் நடந்த கையோடே வடமாகாணத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெற்றோலுக்கான வரிசை களைகட்டியது.அதிலும் தென்பகுதியில் ஓரளவுக்கு வழமை நிலைமை ஏற்பட்ட போதும், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படட நிலையில் கூட வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இன்னும் மக்கள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்பதனைக் கைவிடவில்லை. 37 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பில் உள்ளது தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்தாலும் எரிபொருளுக்கான வரிசை குறைந்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போலவே இலங்கை அரசாங்கங்களை எதற்குமே நம்பாத நமது தமிழ் மக்கள் இந்த விடயத்திலும் நம்பாது எரிபொருளுக்கான வரிசைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.
வடக்கு,கிழக்கிலுள்ள எரிபொருள் நிலையங்களில் “பெற்றோல் இல்லை ” என அறிவித்தல் பலகையைத் தொங்கவிட்டு, எரிபொருள் நிலையத்தை தடை செய்யப்பட்ட பிரதேசம் போல் மூடி வைத்திருப்பதும் எரிபொருள் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படை, பொலிஸ் ,இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் பெற்றோல் முடிந்துவிட்டது என எரிபொருள் நிலையங்கள் அறிவித்தல் பலகையைத் தொங்கவிடுவதும் தான் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனைத்தான் ஜனாதிபதி அநுரகுமாரவும்” தீயில் கருகிய ஒருவர் தீப்பொறியைக் கண்டாலும் பயப்படுவார் என்று ஒரு பழமொழி உண்டு.அதனால்தான் மக்கள் எரிபொருள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எரிபொருளை சேமித்துவைக்கத் தொடங்குகிறார்கள். மார்ச் முதலாம் திகதி எங்கள் டீசல் விற்பனை 4500 கிலோலீட்டராகஇருந்தது. மார்ச் 3 ஆம் திகதி எங்கள் டீசல் விற்பனை 10 500 கிலோலீட்டராக அதிகரித்தது.பெற் றோல் விற்பனை சுமார் 4000 கிலோலீட்டரிலிருந்து 9000 ஆக அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு என்ற திட்டமிட்ட நெருக்கடியை பயன்படுத்தி ”எரிபொருள் கறுப்பு சந்தை” வியாபாரமும் களை கட்டியுள்ளது .எரிபொருள் நிலையங்களில் வரிசைகளில் நிற்போரில் பலர் இந்த கறுப்பு சந்தை வியாபாரிகளாகவே உள்ளனர்.இந்த எரிபொருள் வரிசைகளை அவதானித்தால் ஒரே ஆட்கள் தினமும் வரிசைகளில் நின்று எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுவதனையும் இவர்கள்தான் வரிசைகளை குழப்பி அடாவடித்தனமாக எரிபொருள் பெறுவதனையும் இதனால் சாதாரண பொதுமக்கள்.அரச ஊழியர்கள் எரிபொருளைப் பெற முடியாமல் திண்டாடுவதனையும் காண முடிகின்றது.
ஆனால் இந்த கற்றுக் கொண்ட பாட அனுபவ வரிசைகளை சிலர் கறுப்புச் சந்தை வியாபாரமாகி கொள்ளை இலாபம் அடிக்க முற்படுவதே செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாகவுள்ளது. சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தினமும் வரிசையில் நின்று எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றைப் பதுக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.பின்னர் எரிபொருளுக்கு அலைந்து திரிபவர்களுக்கு அதிக இலாபத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான சிலரை பொலிஸார் கைது செய்து பதுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான லீற்றர் எரிபொருட்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறாக வடக்கு,கிழக்கில் குறிப்பாக வடக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருளை மீட்பதற்கான தேடுதல் வேட்டையை பொலிஸார் ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்கான லீற்றர் எரிபொருட்களை மீட்டு வடக்கு மாகாணத்திற்கு இன்னும் 6 மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டு ஏற்படாத வகையில் விநியோகிக்கலாம். இவ்வாறாக மத்திய கிழக்கில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறுமளவிற்கு , பல்லாயிரக்கணக்கான லீற்றர் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமை சாதாரண மக்களையும் அரச ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்களை மோசமாகப் பாதிக்கின்றது.
இவ்விடயத்தில் வடக்கு,கிழக்கு மக்களை குறை ,குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்த தமிழ் மக்கள், ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் வடக்கு,கிழக்குமக்களுக்கு குறிப்பாக வடக்கு மக்களுக்கு விதித்த பொருளாதாரத் தடையால் அடைந்த பேரவலம் கொஞ்சநஞ்சமல்ல.பெற்றோல், மண்ணெண்ணெய், சவர்க்காரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பலவருடங்களாக அரசாங்கங்கள் விதித்த தடை காரணமாக தமிழ் மக்கள் பட்ட துன்பமே தமிழ் மக்கள் ”கற்றுக்கொண்டபாடமாக ”மாறி இப்போதும் களை கட்டுகின்ற எரிபொருள் வரிசைகளுக்கும் எரிபொருள் சேமிப்பு (பதுக்கல்) பழக்கத்திற்கும் அடிப்படைக் காரணமாகவுள்ளது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் காலை ,மதியம் மாலை இரவு என்று பவுசர் பவுசராக எரிபொருள் வந்து கொண்டே இருக்கிறது.ஆனால் காலை ,மதியம் மாலை இரவு என்று எரிபொருளுக்கான வரிசையும் நீண்டுகொண்டே இருப்பதுடன் எரிபொருளும் முடிந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலை இலங்கையில் வேறு மாகாணங்களில் காணப்படவில்லை. எனவே தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க -இஸ்ரேல் போரினால் இலங்கையின் வடக்கு மாகாணம் எண்ணெய்வளம் நிறைந்த ஒரு குட்டி மத்தியகிழக்காகி வருகின்றது.




















