முடங்கி வரும் இலங்கை… அநுரவுக்கும் எதிரியாகுமா ‘கியுஆர்’ ?……..
Share
”எரிபொருள் ,சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு,அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் ,பதுக்கல்கள்,QR நடைமுறை ,வரிசைகள் என முழுநாடும் முடங்கி இலங்கை மெல்ல மெல்ல கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்காலத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில் ”புது மாப்பிள்ளைகள்”ஆன அரசாங்கத்தினர் ஆட்சியைக்கொண்டு நடத்துவதில் ”ஆட்டம்”காணத் தொடங்கியுள்ளனர்”
கே.பாலா
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்றார்.ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் ”எது நடந்ததோ அது மோசமானதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் மோசமானதாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் மோசமானதாகவே நடக்கும்” என்றவாறாகவே தற்போதைய அரசியல்,பொருளாதார, வாழ்வாதார நிலைமைகள் அதலபாதாளத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டில் ஆட்சியமைத்தது முதல் இன்று வரை அவர்களுக்கு ”கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி”யாகவே இருக்கிறது. சாண் ஏற முழம் சறுக்கும் விதமாகவே அவர்களின் ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நெருக்கடிக்குள்ளிருந்தும் தலையைத் தூக்கும் போதெல்லாம் தலையில் இன்னொரு சம்மட்டி அடி விழுகின்றது. அந்தவகையில்தான்.அண்மையில் நாட்டைப் புரட்டிப்போட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் ”டித்வா ” புயல் அள்ளிச்சென்ற அவலத்திலிருந்து எவ்வாறு மீள்வதெனத்தெரியாது அரசாங்கம் அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில்தான் தற்போது மத்தியகிழக்கில் நடக்கும் போர் இலங்கையிலும் ஆட்சியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
தற்போது மத்திய கிழக்கில் அமெரிக்கா -இஸ்ரேலினால் வீசப்படும் குண்டுகள்,ஏவப்படும் ஏவுகணைகளின் தாக்கத்தினால் இலங்கையிலும் எரிபொருள் தட்டுப்பாடு,சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் ,பதுக்கல்கள்,QR (கியூ ஆர்) நடைமுறை, வரிசைகள் என முழுநாடும் முடங்கிவரும் நிலையில் இலங்கை மெல்ல மெல்ல கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்காலத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில் ”புது மாப்பிள்ளைகள்” ஆன ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினர் ஆட்சியைக்கொண்டு நடத்துவதில் ”ஆட்டம்”காணத் தொடங்கியுள்ளதாகவே தெரிகின்றது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான மஹிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட அரசு பதவியேற்ற நிலையில் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படுமென ஏதோவொரு வகையில் மூவினமக்களும் அப்போது எதிர்பார்த்ததனர். அதிலும் மூவினங்களையும் சேர்ந்த ஓரினமான வறிய மக்கள் தமது வாழ்க்கையில் ஒளியேற்றப்படும், வாழ்க்கைச் செலவுகள் குறைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை மட்டுமன்றி சிங்களவர்களின் எதிர்பார்ப்புக்களைக்கூட நிறை வேற்ற முடியாத ஒரு தோல்வி கண்ட அரசாங்கமாகவே கோத்தா-மஹிந்த அரசு மக்கள் போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்டது
2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ,பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே கொரோனாவின் ஆட்சியும் இலங்கையில் வேரூன்றத் தொடங்கியது. இதன் விளைவாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய ”நாடு முடக்கம்”, ”பயணத்தடை” என்ற விடயங்கள் தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டன. கிட்டத்தட்ட 17 மாதங்களாக மக்களின் வாழ்க்கை மாறாதபோதும் அவர்கள் நிற்கும் ”வரிசை”களின் பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தன.
ராஜபக்ச அரசின் எரிபொருள் விலையேற்றத்தினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதினால் உருவான ”எரிபொருளுக்கான வரிசை”, ”சமையல் எரிவாயுவுக்கான வரிசை” ”பால் மாவுக்கான வரிசை” மதுபான சாலைகளுக்கு முன்பாக உருவான ”குடிமகன்களின் வரிசை” இவற்றை வாங்க பணம் இல்லாததினால் மக்களினால் உருவாக்கப்பட்ட ”நகை அடகு நிலையங்களுக்கு முன்பான வரிசை” என மக்கள் வரிசைகளில் நிற்கும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இவ்வாறான மக்களின் வரிசைகளுக்கு மத்தியில் ராஜபக்சக்களின் அரசியல் குடும்ப வரிசையும் நீண்டுகொண்டே சென்றது.
எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் மக்கள் தமது வாழ்க்கையை, ஜீவனோபாயத்தை,எதிர்காலத்தை தொலைத்தவர்களாக ,கையேந்துபவர்களாக ,அத்தியாவசிய தேவைகளுக்காக வரிசையில் நிற்பவர்களாக மாறினர். பொருளாதார நெருக்கடிகள், வாழ்க்கைச்செலவுச் சுமைகள் கட்டுக்கடங்காது அதிகரித்தன இதற்கு கொரோனாவும் பிரதான காரணமாக இருந்தாலும் ராஜபக்ச அரசின் தீர்க்கதரிசனமற்ற, பிடிவாத, இறுமாப்பு அரசியலும் அரசு சார்ந்த மோசடிப் பேர்வழிகளின் தவறான வழிகாட்டுதல்களும் அரசியல் அனுபவமற்ற கோத்தபாயவின் அணுகு முறைகளுமே ராஜபக்சக்களின் அரசு மக்களினால் விரட்டியடிக்கப்பட பிரதான காரணங்களாக இருந்தன.
இவ்வாறாக ராஜபக்சக்களின் ஆட்சியில் ஏற்பட்ட ”வரிசை”களே அவர்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் அலையை ஏற்படுத்தி ”கோத்தா கோ கோம்” போராட்டமாக வெடித்து ராஜபக்சக்களை ஆட்சிக் கதிரைகளிலிருந்து தப்பியோடவைத்தது. இதன்பின்னர் அதிர்ஷ்ட ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் சில வரிசைகளை கட்டுப்படுத்தியதுடன் எரிபொருள் வரிசையைக்கட்டுப்படுத்த QR(கியூ ஆர்) நடைமுறையை தொடர்ந்தார். அவரும் பின்னர் மக்களினால் நிராகரிக்கப்பட்டு ராஜபக்சக்களைப்போல் அரசியலிலிருந்தே ஒதுக்கப்பட்டார். ராஜபக்சக்களின் ”வரிசை”ஆட்சிக்கு எதிரான இந்தமக்கள் போராட்டத்தின் பின்னணியில் தற்போதைய ஆட்சியாளர்களான அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினரும் பெரும்பங்காற்றியிருந்தனர் .
ராஜபக்சக்களின் ஆட்சிக்கு சீனாக்காரனின் கொரோனா வைரஸும் அதன் விளைவான பொருளாதார பேரழிவும் எப்படி எதிரியாகி அதுவே இந்த ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரசார நண்பனாகி அந்த ஆட்சியை வீட்டுக்கு விரட்டியதோ அதேபோன்றே தற்போதுஆட்சியில் இருக்கும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்திஆட்சிக்கு அமெரிக்கா -இஸ்ரேல்காரர்களின் ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களும் குண்டு வீச்சுக்களும் அதன் விளைவான பொருளாதார நெருக்கடியும் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகளும் வில்லனாகி ராஜபக்சக்களின் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரசார நண்பனாகியுள்ளதால் தற்போதைய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சக்களின் ஆட்சியில் மக்கள் எதிர்த்த .வெறுத்த ,விரும்பாத எரிபொருள், எரிவாயு வரிசைகள் , QR (கியூ ஆர்) நடைமுறை ,அத்தியாவசியப்பொருட்களுக்கான விலையேற்றங்கள், தட்டுப்பாடுகள், பதுக்கல்கள், மக்கள் எதிர்பார்த்து ஏமாறிய,ஏமாற்றப்பட்ட விடயங்கள் என அனைத்தும் இவற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு அப்போது தலைமைதாங்கிய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பில் இருக்கும் தற்போதைய நிலையில் மீண்டும் ”வரிசை”கட்டி ஏற்பட்டு வருகின்றமை தான் இந்த அரசை தடுமாற வைத்து வருவதுடன் மக்கள் மத்தியிலும் அநுரகுமார அரசாங்கம் மீதான நம்பிக்கையீனங்களையும் வெறுப்புணர்வுகளையும் அதிகரிக்க வைக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கான வரிசைகளை ஏற்படுத்தி மக்களைப் பாடாய்ப்படுத்தி GR (கோத்தபாய ராஜபக்ச), RV (ரணில் விக்கிரமசிங்க) ஆகியோருக்கு எதிரியாகி அரசியலிலிருந்தே விரட்டியடித்த முக்கிய விடயமான இந்த QR என்ற மக்கள் விரோதி தற்போதைய ஜனாதிபதியான AK (அநுரகுமார) யினாலும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதனால் நாட்டில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் உருவாகி கொரோனா, பொருளாதார நெருக்கடி காலங்களை மீண்டும் நினைவூட்டுவதனால் கோத்தபாய, ரணிலுக்கு எதிரியான இந்த QR , AKக்கும் (அநுரகுமார)எதிரியாக அமைந்து விடும் வகையிலேயே இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை உள்ளது.
ராஜபக்சக்களுக்கு ”வரிசை’களில் இருந்தே மக்கள் எதிர்ப்பு வெளிக் கிளம்பத் தொடங்கியது போன்றே தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருட்களுக்கான QR வரிசைகளிலிருந்து அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புணர்வுகளும் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. ”இந்த வரிசை ஆட்சி வேண்டாம் என்றுதான் கோத்தபாயவை விரட்டினோம். QR நடைமுறை வேண்டாம் என்றுதான் ரணிலை தோற்கடித்தோம்.இப்போது அநுரகுமார அரசாங்கமும் QR வரிசையை கொண்டுவந்துள்ளது என்றால் இந்த ”வரிசை” ஆட்சியும் நமக்கு எதற்கு? ”என்ற குமுறல்களை எரிபொருளுக்கான வரிசைகளில் தாராளமாகக் கேட்க முடிகின்றது.
எனவே பாராளுமன்றத்தில் உள்ள ”மூன்றில் இரண்டு பலம்” என்ற கவசத்துடனும் ”இலங்கையின் மீட்பர்”என்ற சுலோகத்துடனும் பௌத்த பீடங்களினாலும் இனவாதிகளினாலும் 69 இலட்சம் சிங்களவர்களினாலும் தெரிவு செய்யப்பட்டு இவர் தான் இனி இலங்கையின் தொடர் ஜனாதிபதி என மகுடம் சூட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தை இந்த எரிபொருள்,எரிவாயு விலை அதிகரிப்புகளும் ”வரிசை”களும் QRகளுமே இடை நடுவில் முடிவுக்கு கொண்டுவந்து ரணில்-ராஜபக்சக்களை அரசியலிலிருந்தே வெளியேற்றின என்பதனை தற்போதைய ஆட்சியாளர்களான ”புதுமாப்பிள்ளைகள் ”நினைவில் கொள்ளவேண்டும்.அப்போதுதான் நாட்டை ஒரு தடவையேனும் முழுமையாக ஆட்சி செய்ய முடியும்.




















