LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்புக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது – ஈரான் எச்சரிக்கை

Share

ஈரானை வான் வழியாக தாக்கி வந்த அமெரிக்கா, இனி தரை வழியாகவும் தாக்குதல் நடத்த கூடும் என தகவல் வெளியானது. அதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது. ஏற்கனவே மோதல், பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், தரை வழி தாக்குதலுக்கான சாத்தியம் பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவது பற்றி, ஈரான் ராணுவ வட்டாரம் தஸ்னிம் என்ற செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்து உள்ளது. அதில், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஈரான் மீது நடத்தப்படும் தரை வழி தாக்குதல் என்பது எங்களுடைய எச்சரிக்கை கோடுகளில் ஒன்றாகும். ஒவ்வோர் எதிரியின் தாக்குதலுக்கும் நாங்கள் ஆச்சரியம் கொடுத்து வருகிறோம். இந்த விசயத்திலும் அதனை நாங்கள் காட்டுவோம் என தெரிவித்து உள்ளது.

எங்களுடைய எரிசக்தி உள்கட்டமைப்பை தாக்கினால், இந்த பகுதியிலுள்ள அனைத்து எரிசக்தி உள்கட்டமைப்புகளும் செயலிழந்து போகும். இந்த முறை நாங்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதி டிரம்ப், இந்த விசயத்தில் ஏதேனும் தவறு செய்கிறார்கள் என்றால், அவருக்கு ஆச்சரியம் ஒன்றை நாங்கள் தருவோம். எங்களுடைய பூமியில் இருந்து அமெரிக்க ராணுவத்தினரின் சவப்பெட்டிகளை கூட அவரால் அகற்ற முடியாது என ஈரான் ராணுவத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. அது முதற்கொண்டு நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தளபதிகள், அதிகாரிகள் என பலர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது.