LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழில் பல குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை!

Share

பு.கஜிந்தன்

யாழில் பல குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபை பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வீதியை 25க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றோம். கிட்டத்தட்ட எமக்கு தெரிய 80 வருடங்களுக்கு மேல் எமது மூதாதையர்கள் இந்த வீதியை பயன்படுத்தியதுடன் தற்போது நாங்கள் இந்த வீதியை பயன்படுத்தி வருகிறோம்.

இந்த வீதியின் ஆரம்பத்தில் உள்ள காணி ஒன்றினை வாங்கிய குடும்பம் ஒன்று, குறித்த வீதி தமக்குரிய வீதி என்றும், நாங்கள் அதனை பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றம், மல்லாகம் நீதிமன்றம் உட்பட மூன்று நீதிமன்றங்களில் அந்த வழக்கு நடைபெற்றது. பின்னர் குறித்த குடும்பம் அந்த வீதியை தனித்து உரிமை கோர முடியாது என்றும், அனைவரும் அந்த வீதியை பயன்படுத்த முடியும் என்றும் தீர்ப்பளித்தது.

தற்போது மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் க.ஜெசீதன் முன்னர் உறுப்பினராக இருக்கும்போது அந்த வீதிக்கு வந்து, எமது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அதன்பின்னர் அந்த வீதியில் உள்ள சேற்றினை எடுத்து தனது உடை முழுவதும் பூசி விட்டு அப்படியே பிரதேச சபையின் அமர்வுக்கு சென்றார்.

குறித்த வீதி புனரமைக்காமல் இருப்பதால் அந்த வீதியில் தான் தடக்கி விழுந்து, உடையில் சேறு பட்டுள்ளதாகவும், எனவே அந்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்றும் சபை அமர்வில் கூறினார்.

தற்போது அதே ஜெசீதன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கின்றார். உறுப்பினராக இருக்கும்போது இந்த வீதியின் பிரச்சினை தெரிந்தது, ஆனால் தவிசாளராக இருக்கும் எமது வீதிப் பிரச்சினை மறந்துபோனதா? அவர் தவிசாளராக வந்த பின்னர் மூன்று தடவைகள் நேரில் சென்று, குறித்த வீதியை பயன்படுத்துமாறு கூறினோம். ஆனால் இதுவரை அதனை புனரமைக்கவில்லை.

குறித்த வீதியை கர்ப்பிணி தாய்மார், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மழை நேரத்தில் மாணவர்கள் காலணிகளை போட்டுக்கொண்டு அந்த வீதியால் நடக்க முடியாமல், பிரதான வீதி வரை கையில் எடுத்து சென்று, அந்த வீதியில் வைத்தே காலணிகளை அணிய வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

அவசரம் என்றால் நோயாளர் காவு வண்டி கூட வரமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலும் தற்போது எமது பகுதிக்குள் இருந்து மூன்று பிள்ளைகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளனர். இது எமக்கு பெருமையை தருகிறது.

எனவே பிரதேச சபையானது இது குறித்து அதிக கவனம் செலுத்தி வீதியை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.