”உயிர்த்த ஞாயிறு”தாக்குதலும் இலங்கையில் ‘உயிர்த்தெழாத’ நீதியும்
Share
”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்துக்குள் தள்ளிய நிலையில் ஆட்சிகளில் இருந்தவர்களும் ,ஆட்சியைப் பிடிக்க விரும்பியவர்களும் தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் இக்கொடூர தாக்குதல்களை தமக்கான அரசியல் பிரசார இனவாத ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றமையே கடந்த 7 வருடங்களாகத் தொடர்கின்றது”. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியை அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்ற உறுதி வழங்கப்பட்டிருந்தது . இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்தார். இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் பேரினவாதக்கட்சிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிடத்திகதியில் மட்டுமல்ல இன்றுவரை ஜனாதிபதி பிரதான சூத்திரதாரியை அறிவிக்க வில்லை. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்ததுடன் பேரினவாதக்கட்சிக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சும் வெளிப்பட்டது.—–கே.பாலா
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ”உயிர்த்த ஞாயிறு” தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் பலியெடுக்கப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகாயப்படுத்தப்பட்ட கொடூரம் நடந்து எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 7வருடங்களாகும் நிலையில் இன்றும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி உயிர் பெறாதேயுள்ளது.
முஸ்லிம் பயங்கரவாதிகளின் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்துக்குள் தள்ளிய நிலையில் ஆட்சிகளில் இருந்தவர்களும் இருப்பவர்களும் ஆட்சியை பிடிக்க விரும்புகின்றவர்களும் இக்கொடூர தாக்குதல்களை தமக்கான அரசியல் பிரசார ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றமையே இன்று வரை தொடர்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வாழ்க்கைச் சுமையைத்தாங்க முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளபோதும் தற்போதும் ”ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார்” என்ற கோஷத்தையே எதிர்க்கட்சிகள் குறிப்பாக இனவாதக்கட்சிகள் முன்வைக்கின்றன.
இலங்கையில் தற்போது எந்த அரசியல் நெருக்கடியோ மக்களின் பிரச்சினைகளோ வாழ்வாதார நெருக்கடிகளோ இல்லை .இருக்கும் ஒரே பிரச்சினை உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார்? நாட்டில் மீண்டும் ‘முஸ்லிம். பயங்கரவாதம், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்குகின்றது என்பது போன்ற படங்களை கடந்த தேர்தலில் மக்களினால் ஒதுக்கப்பட்ட இனவாத சிங்கள அரசியல் கட்சிகளும் முன்னாள் அமைச்சர்களும் கடும் இனவாதிகளுமான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்றவர்களும் தற்போது மீண்டும் காட்டத்தொடங்கியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடி 7 ஆண்டுகளை வீணடித்துள்ளோம். பயங்கரவாதி சஹ்ரான் அமைதியாக தாக்குதல்களை நடத்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் திரைமறைவில் இருந்து செயற்பட்டுள்ளார்கள். சாரா இந்தியாவுக்கு செல்லவில்லை.உலகை விட்டே சென்றுவிட்டாள். சஹ்ரானை தவிர பிறிதொருவர் பிரதான சூத்திரதாரி என்று குறிப்பிடுபவர்கள் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபடலாம் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலதான் தற்போது உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலை மீண்டும் உயிர் பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி 40 ஆயிரம் தமிழர்களை இராணுவத்தினர் கொன்றார்கள் என்ற புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் வலுவிழந்துள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை இராணுவத்தின் மீது சுமத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதற்கு இந்த அரசாங்கமும் ஒத்துழைக்கிறது.சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 300 பேர் தற்போதும் சமூகத்தில் சுதந்திரமாக உள்ளார்கள். மனித தற்கொலை குண்டுதாரிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவர்கள் நிச்சயம் மனித குண்டுகளாக வெடிப்பார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் பிரசாரங்களை முன்னெடுத்து நாட்டை மீண்டும் அச்சத்திற்குள் தள்ளிவிடுவதுடன் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக்கலவரங்களையும் ஏற்படுத்தும் காய்களை நகர்த்தத்தொடங்கியுள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியை அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்ற உறுதி வழங்கப்பட்டிருந்தது . இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்தார். இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் பேரினவாதக்கட்சிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிடத்திகதியில் மட்டுமல்ல இன்றுவரை ஜனாதிபதி பிரதான சூத்திரதாரியை அறிவிக்க வில்லை. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்ததுடன் பேரினவாதக்கட்சிக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சும் வெளிப்பட்டது.
இவ்வாறான நிலையில்தான் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தனக்குத்தெரியும். அவர் தொடர்பில் ஆதாரங்களுடன் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளேன் .அந்த நிகழ்வில் பிரதான சூத்திரதாரியின் பெயரை அறிவிப்பேன் என பெரும் பிரசாரங்களை முன்னெடுத்து பரபரப்பை ஏற்படுத்திய உதய கம்மன்பில கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் அண்மையில் ‘ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லல்’ என நூலை வெளியீட்டு வைத்து பிரதான சூத்திரதாரி ”ஷக்ரான்” தான் எனக்கூறி அரைத்த மாவை மீண்டும் அரைத்துள்ளார்.
உதய கம்மன் பிலவின் இந்த ஏமாற்று வேலையால் மக்கள் சினமடைந்த நிலையில் அந்த புத்தக வெளியீட்டில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிதாமகன்கள் எனக் குற்றம்சாட்டப்படிருந்த முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச , மைத்ரிபால சிறிசேன , கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் பங்கேற்று முன்வரிசையில் அமர்ந்திருந்தமை கம்மன்பிலவின் நூல் தொடர்பிலும் நூல் வெளியீடு தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை பாதுகாக்கும் வகையில் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீடு இடம்பெற்ற நிலையில் நூலை வெளியிட்ட கம்மன்பில மீதும் அதில் பங்கேற்றவர்கள் மீதும் கடும் விமர்சனங்கள்,குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவற்றை மீண்டும் திசைதிருப்ப ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான முஜிபூர் ரஹ்மானுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றது என்று அடுத்த குண்டைத்தூக்கிப்போட்டார் உதய கம்மன்பில.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை ஷக்ரானே நடத்தினார் என்று கூறுவது புதுமையான விடயமல்ல. ஆனால் எனது புத்தகத்தில் என்ன உள்ளது என்பதனை சரியாக வாசித்தால் என்ன கூற வருகின்றேன் என்பதனை புரிந்துகொள்ள முடியும். நான் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவின் சட்டத்தரணி என்பதனால் எனது புத்தகத்தில் உள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஜிபூர் ரஹ்மான் கூறியுள்ளார். புத்தகத்தை சரியாக வாசிக்காமல் அவர் இவ்வாறு கூறுகின்றார்.
இதுவரையில் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்றுதான் கருதப்பட்டது. ஆனால் 2019 மார்ச் 19ஆம் திகதி நௌபர் மௌலவியும் ஷக்ரானும் ஐ.எஸ். சிறீலங்கா அமைப்பில் இருந்து இரண்டு பிரிவுகளாக பிளவடைந்தனர் . இதனால் நௌபர் மௌலவிக்கு அந்த தாக்குதல் திட்டங்களுடன் தொடர்பில்லை என்று தெரியவருகின்றது. இந்நிலையில் எவ்வாறு தாக்குதலுக்கு திட்டமிடல்கள் நடத்தப்பட்டன என்பது தொடர்பில் எனது புத்தகத்தில் உள்ளது.
அரசாங்கத்தை கஸ்டப்படுத்தும் வெளிப்படுத்தல்களை நான் வெளியிடும் போது அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் குழப்பமடைவதில் அர்த்தம் உள்ளது. ஆனால் ஏன் முஜிபூர் ரஹ்மான் குழப்பமடைய வேண்டும். முஜிபூர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தாலும் 1999 தேர்தலில் ஜே.வி.பிக்கே அவர் ஆதரவளித்தார். அத்துடன் 2019இல் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது பயங்கரவாத விசாரணை பிரிவினால் இந்தியாவில் பிடிக்கப்பட்ட ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவருடன் முஜிபூர் ரஹ்மான் தொடர்புகளை பேணியதாக தகவல்கள் வெளியாகின. இதன்படி இவரிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவையிருந்த போதும், பொலிஸ் உயர் அதிகாரியொருவர் அதனை தடுத்து நிறுத்தினார். அத்துடன் அகமதாபாத் நகரில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டிருந்தவர்கள் முஜிபூர் ரஹ்மானுடன் தொடர்புபட்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டவருடன் தொடர்புபட்டிருந்தவர்களாகும்.
இதேவேளை அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ஷ ஐ.எஸ் .இயக்கத்துடன் இணைந்தவர்கள் தொடர்பான தகவல்களை கூறும் போது அதனை இனவாத கருத்தாக கூறி அவற்றை தடுத்து நிறுத்த முஜிபூர் ரஹ்மான் நடவடிக்கையெடுத்திருந்தார். இந்நிலையில் இப்போது ஏன் எனது புத்தகத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டும். 2016ஆம் ஆண்டில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் விசாரணைகளை நிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வழியேற்படுத்தியது முஜிபூர் ரஹ்மானே என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை மேலும் ஊதிப்பெருப்பிக்கும் வகையில் ”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியா அல்லது முஜிபூர் ரஹ்மானா என்ற சந்தேகங்கள் எழுகின்றன .முஜிபூர் ரஹ்மானின் செயற்பாடுகளை பார்க்கும் போது இவரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவரே என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உதய கம்மன்பிலவின் நண்பரும் இனவாதியுமான சரத் வீரசேகரவும் குட்டையை குழப்ப முயன்றுள்ளார்.
கோதாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வரும் அரசியல் சூழ்ச்சி இதற்குள் உள்ளதாக முஜிபூர் ரஹுமான் கூறுகின்றார். ஆனால் இந்த விடயத்தில் ஐ.எஸ். அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை. ஷக்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகிய இருவரும் ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்கள் . இஸ்லாம் அரசை அமைப்பதே அந்த இயக்கத்தின் நோக்கம். விசாரணைகளில் அவர்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் முஜிபூர் ரஹ்மான் அதனை கூறாமல் அரசியல் சூழ்ச்சி என்று கூறுகின்றார். இதனால் ஐஎஸ் அமைப்பின் ஒப்பந்தத்தை அவர் செய்கின்றாரா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அதன்படிதான் சலேவை கைது செய்கின்றார்களா? என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
2016ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து நான்கு குடும்பங்கள் அடங்களாக 37 பேர் சிரியாவுக்கு ஐஎஸ் பயிற்சிக்காக சென்றுள்ளதாக அப்போதிருந்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறிய போது, அதனை முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினரே இதனை நிராகரித்து, இது இனவாத கருத்துக்கள் என்று அது தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். இவ்வாறான நிலைமையிலேயே 2019இல் தாக்குதல் நடந்தது. சரியாக விசாரணை நடந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம். இதனால் குறித்த விசாரணைகளை நடத்தவிடாமல் இடையூறுகளை ஏற்படுத்திய முஜிபூர் ரஹ்மானே இதற்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என்றவாறாக குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முஜிபூர் ரஹ்மான் ‘’சுரேஷ் சலேவிடம் விசாரணை நடத்தும் போது சரத் வீரசேகர ஏன் பதற்றமடைகின்றார் , கம்மன்பில ஏன் குழப்பமடைய வேண்டும்?. சரத் வீரசேகர பொலிஸ் அமைச்சராக இரண்டு வருடங்களாக கோதாபய ராஜபக்ஷ காலத்தில் இருந்தார். ஏன் என்னை அப்போது கைது செய்யவில்லை? அதாவது பிரதான சூத்திரதாரிகளை தேடிச் செல்கையில் அவர்கள் பயந்துள்ளனர் என்றே கூற வேண்டும். சுரேஷ் சலேவின் வாக்குமூலங்களை பார்த்தால் ஷக்ரானுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதனை தெரிந்துகொள்ளலாம்.எவ்வாறாயினும் ஷக்ரானுக்கு உதவியவர்கள், அவருக்கு தேவையானவற்றை செய்தவர்கள், அவர் எவருடைய தேவைக்காகவும் இதனை செய்திருந்தால், அவ்வாறு உதவியளித்த குழுக்கள் இந்த நாட்டில் வெளியில் இருப்பார்களாக இருந்தால் அவர்கள் எமது தேசிய பாதுகாப்புக்கும், தேசிய ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தலாகும். அந்த குழுக்களை உடனடியாக கைது செய்து அவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டு வர வேண்டும் ‘’என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் ”முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்பவற்றை அடிப்படையாக வைத்து ஏற்படுத்திய இனப்பிரிவினையை மீண்டும் உருவாக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ள நிலையில் ஜே .வி.பி. பொது செயலாளர் டில்வின் சில்வா ,அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் ”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டில் பங்கேற்றிருந்தனர்” என்று கூறியுள்ளனர்
இவ்வாறாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதில் முன்னாள், இந்நாள் அரசாங்கங்கள் ஆடு,புலி ஆட்டம் ஆடி வரும் நிலையில் ”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் 7 ஆவது ஆண்டு நினைவு தினத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆறாத ரணத்துடன் கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டிக்கவுள்ளனர் . இந்த நிலையில்தான் கடந்த 7வருடங்களாக இந்த தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களும் இத்தாக்குதல்களை பயன்படுத்தி அரசினால் அரசியல் இலாபம் கருதி நடத்தப்பட்ட வேட்டைகளினாலும் இனவாதிகளினால் நடத்தப்பட்ட இன, மத வெறித்தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களும் நீதிக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் ”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பகுதியினர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்பதினாலும் அடுத்த தரப்பினரான முஸ்லிம்களும் சிறுபான்மையினத்தவர்கள் என்பதினாலுமே ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் நீதியை வழங்காது அரசியலை செய்கின்றது என்றே கருத வேண்டியுள்ளது.’உயிர்த்த ஞாயிறு ”தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பயங்கரவாதிகளின் நோக்கமும் இலங்கை பேரினவாத அரசியல்வாதிகளின், அரசாங்கங்களின் நோக்கமும் ஒன்றாகவே இருந்துள்ளது. அதனால் தான் தாக்குதல் நடந்து 7 வருடங்களாகும் நிலையிலும் தாக்குதல் சூத்திரதாரிகளும் சிக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல் விடயத்தில் இலங்கையில் நீதி உயிர்த்தெழவில்லை என்பதே உண்மையாகவுள்ளது.















