LOADING

Type to search

இந்திய அரசியல்

தேர்தல் நாளில் பேருந்துகளை கூடுதலாக இயக்க ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – சசிகலா கேள்வி

Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் நள்ளிரவில் கடும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. பேருந்துகள் கிடைக்காததால் நள்ளிரவிலேயே மக்கள் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து போராடும் சம்பவமும் நிகழ்ந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை என்று அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படாததால், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசு பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து உள்ளனர். பயணிகள் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனர். அதேபோன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வாக்களிக்கச் செல்ல பேருந்துகள் இல்லாமல் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேருந்து வசதி இல்லாமல் இதே அவல நிலைதான் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடைபெறும் நாளில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூர் செல்வது தடுக்கப்படுகிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும் வாக்களிப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அதை தடுக்கும் விதத்தில் செயல்படுகின்ற திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவினர் தமிழகத்தில் வாக்குப்பதிவு அதிகரிப்பதை தடுப்பதற்கு ஏதாவது தில்லுமுல்லுகளை அரங்கேற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழக வாக்காளர்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.