LOADING

Type to search

இலங்கை அரசியல்

இசைக் கலைஞர் தேனிசை செல்லப்பா மறைவு!

Share

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை

தனது இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் இனிய நண்பர் தேனிசை செல்லப்பா ஆவார்.

பாரதி, பாவேந்தர், காசி ஆனந்தன் ஆகியோரின் தமிழுணர்வுப் பாடல்களை அவர்கள் எத்தகைய உணர்வுடன் பாடினார்களோ, அதே உணர்வைக் கோடிக்கணக்கான தமிழர்களுக்குக் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் அவர்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான தனது இசைத் திறனை முழுமையாக ஒப்படைத்தவர் அவர். விடுதலைப்புலிகளின் பாசறைகளிலும், உலகெலாம் வாழ்கிற ஈழத் தமிழர்களின் இல்லங்களிலும், சுருங்கக் கூறின் உணர்வுள்ள தமிழர்களின் இல்லங்கள் தோறும், இன்றுவரை ஒலிக்கும் அவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவையாகும். அதனால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அவரைத் தமிழீழத்திற்கு அழைத்துத் தனது கரத்தால் அவருக்குப் பொற்ப் பதக்கம் அணிவித்துப் பாராட்டினார். இந்த பெருமையைப் பெற்ற ஒரேயொரு இசைக் கலைஞன் தேனிசை செல்லப்பா மட்டுமே.

அவரது இசைத்திறனைத் தொழிலாகப் பயன்படுத்தாமல் மக்களைத் தட்டியெழுப்பும் தொண்டாகப் பயன்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நின்று நிலவுமாக.

அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)
தலைவர்.