LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன

Share

மன்னார் நிருபர்
(29-04-2026)

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 29ம் திகதி புதன்கிழமை அன்று (29-04-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , காதர் மஸ்தான், துரைராசா ரவிகரன்,எம்.ஜெகதீஸ்வரன் , திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் நகர சபை , பிரதேச சபை, ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினர்.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, அபிவிருத்தி குழுவின் அனுமதி பெற்று விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான அங்கீகாரம் இதன்போது வழங்கப்பட்டது.மன்னார் பகுதியில் உள்ள குறை குளம் புனரமைப்பு பணிகளின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூட்டத்தில் கடுமையான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை கண்டறியுமாறு இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.மன்னார் தீவுப் பகுதியில் அண்மைக்காலமாக கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.

அதனைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், மன்னார் மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையான கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டன.

இவற்றுடன் மாவட்டத்தின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.