இந்தோனேசியா: டுகோனோ எரிமலை வெடித்து 3 பேர் பலி
Share
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில் இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணம், ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை கடந்த சில வாரங்களாகவே புகைந்து வந்தது. இந்த நிலையில் டுகோனோ எரிமலை வெள்ளிக்கிழமை காலை 7.41 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து சுமார் 10 கி.மீ. உயரத்துக்கு கரும்புகையும், சாம்பலும் சீறிப் பாய்ந்தன. 16 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சீற்றத்தால் அப்பகுதியே இருளில் மூழ்கியதுபோல் காட்சியளித்தது. இந்த சீற்றத்தை தொடர்ந்து, எரிமலை ஆய்வு மையம் அப்பகுதியில் 3-வது நிலை பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எரிமலை வெடித்த சமயத்தில், அதன் உச்சி பகுதியில் தடையை மீறி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 20 பேர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 9 பேர் சிங்கப்பூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள், மீதமுள்ள 11 பேர் இந்தோனேசிய வழிகாட்டிகள் ஆவர். அவர்களை தேடி மீட்க ராணுவத்தினர் மற்றும் போலீசார் அடங்கிய மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மலை பகுதிக்கு விரைந்தனர். இதில் சிங்கப்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் உடல் கருகி பலியானது தெரியவந்தது. மீதமுள்ள 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எரிமலையிலிருந்து 4 கி.மீ. சுற்றளவிற்குள் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது மழைக்காலம் என்பதால், எரிமலை சாம்பலுடன் மழைநீர் கலந்து எரிமலை சேறு ஆறாக ஓடி வரும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.















