ரூ.10.50 லட்சம் கோடி கடன்: அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
Share
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “கடந்த ஆட்சியில் இதுவரை ரூ. 10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். என்ன நடந்துள்ளது என்பது முதலில் எங்களுக்கு தெரிய வேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம்” என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும். அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















