சிவாஜிலிங்கத்துக்குக் கிடைத்த உதவி: கருணையா? கடமையா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
Share
2009 அவலங்களைத் தொடர்ந்து வந்த நினைவு நாட்களின் போது சிவாஜி அவர்கள் ஒரு தனி மனிதப் படையாக தன்னுடைய முச்சக்கர வண்டியில் ஒரு வாழைத் தண்டையும் சுடர் ஏற்றத் தேவையான பொருட்களையும் காவிக் கொண்டு வருவார்.திடீரென்று யாரும் எதிர்பாராத ஒர் இடத்தில் சுடரை ஏற்றி விடுவார்.அவருடைய எல்லா போராட்டங்களும் அந்த வகைப்பட்டவைதான். மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க மாட்டார்.மற்றவர்களை அதிகம் கேட்கவும் மாட்டார். அதனால் பல சமயம் தனியோட்டம் ஓடுவார். அந்தத் தனி ஓட்டம் விமர்சனத்துக்குரியது. ஆனாலும் சிவாஜியின் ஒரு வித கிறுக்குத்தனம் கலந்த துணிச்சலான சாகசச் செயல்களுக்கு வரவேற்பு உண்டு.

சிவாஜிலிங்கம் தனது சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு பொதுமக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது முள்ளிவாய்க்கால் நினைவு மாதம் என்பதனால், தமிழ் மக்களின் கூட்டு உளவியல் அதிகம் உணர்ச்சிகரமானதாகக் காணப்படும் ஒரு காலகட்டம். இக்காலகட்டத்தில் முன்பொரு காலம் நினைவு கூர்தலை தனி மனிதனாக முன்னெடுத்த சிவாஜிலிங்கம் அப்படி ஒரு வேண்டுகோளை விடுத்திருப்பது பரவலாகக் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.
அவருக்குத் தொடர்ந்து உதவிகள் கிடைத்து வருகின்றன.முதலாவது பெருந்தொகை உள்நாட்டிலிருந்து, கௌரி தவராசா அறக் கட்டளையியிடமிருந்து கிடைத்திருக்கிறது.இக்கட்டுரை எழுதப்படுகையில் சிவாஜி கேட்ட தொகை பெருமளவுக்குச் சேர்ந்துவிட்டது என்று கணிக்கக்கூடியதாகவுள்ளது.
உதவிகளைச் செய்தவர்கள் முகநூலில் அந்தத் தொகைகளைக் குறிப்பிட்டு வருவதனால் ஓரளவுக்கு அதைக் கணிக்கக் கூடியதாக உள்ளது. அவ்வாறு உதவி செய்பவர்கள் முகநூலில் தம்மைப் பகிரங்கப்படுத்துவது அதிகம் விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம், அவ்வாறு பகிரங்கப்படுத்துவதால் மற்றவர்கள் உதவி செய்யுமாறு தூண்டப்படுகிறார்கள் என்றும் ஒரு விளக்கம் உண்டு.
2009ஐ உடனெடுத்து வந்த நினைவு நாட்களில் போது சிவாஜி ஒரு தனி மனிதப் படையாக தன்னுடைய முச்சக்கர வண்டியில் ஒரு வாழைத் தண்டையும் சுடர் ஏற்றத் தேவையான பொருட்களையும் காவிக் கொண்டு வருவார். திடீரென்று யாரும் எதிர்பாராத ஒர் இடத்தில் சுடரை ஏற்றி விடுவார். அவருடைய எல்லா போராட்டங்களும் அந்த வகைப்பட்டவைதான். மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க மாட்டார்.மற்றவர்களை அதிகம் கேட்கவும் மாட்டார். அதனால் பல சமயம் தனியோட்டம் ஓடுவார். அந்தத் தனி ஓட்டம் விமர்சனத்துக்குரியது. ஆனாலும் சிவாஜியின் ஒரு வித கிறுக்குத்தனம் கலந்த துணிச்சலான சாகசச் செயல்களுக்கு வரவேற்பு உண்டு.
சிவாஜிலிங்கம் ஆயுதப் போராட்டப் பாரம்பரியத்தில் வந்தவர்.மிதவாத அரசியலில் தனக்கென்று ஒரு தனித் தினுசான பாணியைக் கொண்டிருப்பவர். எப்பொழுதும் எளிமையாகத் தோன்றுவார். இரக்கத்தைக் கோரும் முகம். நோய் முற்றிய காலங்களில் ஒரு காலில் பெரிய பந்தத்தைக் கட்டிக் கொண்டு அந்தக் காலை இழுத்து இழுத்து நடந்து போவார். இடையில் கட்டுப்படுத்த முடியாத தொடர்ச்சியான விக்கல் வந்தது. ஆனால் அந்த விக்கலோடு வந்து ஊடகச் சந்திப்பைச் செய்வார். தன்னுடைய பந்தம் கட்டிய காலை இழுத்து இழுத்து அவர் நடந்து போகும்விதம் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதுள்ள நிலைமையைக் குறியீடாக உணர்த்துவதுபோல இருக்கும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் வந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தும் நோக்கத்தோடு ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது. அக்குழு சிவாஜிலிங்கத்தை நல்லூர் “சின்மயா மிஷனில்” சந்தித்தது. அப்பொழுதே சிவாஜிலிங்கம் நோயாளியாகக் காணப்பட்டார். எங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கச் செல்வார். அவ்வாறு தாண்டித் தாண்டி நடந்து போகும்போது சிறுநீர் சிந்திக்கொண்டே இருக்கும். அந்தளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்காவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று அப்பொழுதே ஒரு மருத்துவர்,தமிழ் மக்கள் பேரவையில் இருந்தவர், எனக்குச் சொன்னார்.
அதற்குப்பின் சிவாஜி இந்தியாவில் சிகிச்சை பெற்றார்.அதுவரை அவர் இந்தியாவுக்கு போக முடியவில்லை. தடை இருந்தது. கலாநிதி ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதும் அந்தத் தடையை நீக்கும் முயற்சிகளில் சிவாஜி ஈடுபட்டார். இந்திய அமைதி காக்கும் படை நாட்டில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெய்சங்கர் கொழும்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது ஏற்பட்ட அறிமுகத்தின் அடிப்படையில் சிவாஜி தனக்கு இருந்த பயணத் தடையை நீக்குவதற்கு முயற்சித்தார். பயணத்தடை நீக்கப்பட்டது. அதன்பின் அவர் இந்தியாவுக்குப் போய் சிகிச்சையை முடித்துக்கொண்டு சற்றுத் தேறி வந்தார். எனினும் உடல் நிலை வழமைக்குத் திரும்பவில்லை என்பதனால்தான் மீண்டும் ஒரு சத்திர சிகிச்சை தேவைப்படுகிறது.
தமிழ்த் தேசிய வரலாற்றில், ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்,அதோடு மாகாண சபையிலும் உறுப்பினராக இருந்தவர், இப்படி ஒரு பகிரங்க வேண்டுகோள் விடுத்திருப்பது என்பது நூதனமானது. இதற்கு முன் யாரும் அப்படிக் கேட்டதாக ஞாபகம் இல்லை.தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பதவிக்கு வந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை நிறுத்திய பின், ஒரு மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருப்பதை மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணியச் செயற்பாட்டாளர் சுட்டிக் காட்டியிருக்கிறார். எல்லா ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சிவாஜி இதில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே மற்றவர்களைப் போல இல்லை. ஏனைய மிதவாத அரசியல்வாதிகள் செய்யத் துணியாத காரியங்களை அவர் செய்வார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இறுதிக்காலத்தில் கவனித்தமை,அவருடைய அஸ்தியைப் பொறுப்பேற்றமை முதற்கொண்டு பல விடயங்களிலும் அவர் தனி மனிதனாக, தற்காப்புணர்வின்றிச் செயற்படுவார்.இப்பொழுதும் உதவி கேட்டு நிற்கும் பொழுது ஒரு தனி மனிதனாகத்தான் அந்த உதவியைக் கேட்டார். ஆனால் அவர் தனி மனிதன் அல்ல என்பதனை தமிழ்ச் சமூகம் பெருமைப்படத்தக்க கவிதத்தில் நிரூபித்திருக்கிறது.
அவரோடு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் முரண்படுகிறவர்கள், அவருடைய தனி ஓட்டத்தை, கிறுக்குத்தனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். இங்கே சிவாஜி தமிழ்த் தேசியப் பொது உளவியலின் இரக்க சுபாவத்தை,மனிதாபிமானத்தை நிரூபிக்கும் ஆகப்பிந்திய உதாரணம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.
சிவாஜியின் வேண்டுகோள் வழமைக்கு மாறானது.அதேசமயம் அது ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. சிவாஜிலிங்கம் வெட்கத்தை விட்டு பகிரங்கமாக வாய்விட்டுக் கேட்டிருக்கிறார். ஆனால் அவரைப்போல வாய் விட்டுக் கேட்க முடியாத எத்தனை பேர் எமது சமூகத்தில் உண்டு? அதிலும் குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள், தியாகிகளின் குடும்பத்தவர்கள்…. என்று எத்தனை பேர் தமக்கு உதவி வேண்டும் என்று வாய்விட்டுக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்?
ஆயுத மோதல்களுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது பெருமளவுக்குத் தொண்டு அரசியலில்தான். அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்குத் தொண்டுகளைச் செய்வதன்மூலம் தமது வாக்கு வங்கியைத் தக்கவைக்க முயற்சிப்பது. இதன் நல்விளைவாக கடந்த 17 ஆண்டுகளாக உதவி தேவைப்படுபவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவி கிடைக்கிறது.குறிப்பாக அதிக உதவி செய்வது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான்.
அனர்த்த காலங்களிலும்,ஆபத்தான சந்தர்ப்பங்களிலும்,மனிதாபிமான உணர்வலைககளைத் தோற்றுவிக்கின்ற நிலைமைகளின்போதும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக உதவி வருகிறார்கள். அவர்கள் உதவவில்லை என்று குறைசொல்ல முடியாது. கடந்த 17 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உதவி இருந்திருக்காவிட்டால் தாயகத்தில் நிலைமை இப்போது இருப்பதைவிட மோசமாகவே இருந்திருக்கும். 2009க்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலைப் பொறுத்தவரை முதலில் ஊன்றிகொள்ள கிடைத்தது, புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் உளவியல் ஆதரவுந்தான்.
ஆனால் அந்த உதவிகள் ஒரு மையத்தில் இருந்து இணைக்கப்படவில்லை. அவ்வாறு இணைக்கப்படுவதை அவர்களில் அதிகமானவர்கள் விரும்பவும் இல்லை. இது ஒரு பிரச்சனை. இரண்டாவது பிரச்சினை, யாருக்கு? என்ன உதவி தேவை? என்பது தொடர்பாக யாரிடமும் முழுமையான புள்ளி விபரம் இல்லை. அவரவர் தனக்குத் தெரிந்தவர்களுக்கூடாகப் புள்ளி விபரங்களைப் பெறுகிறார்கள். அந்த அடிப்படையில் உதவுகிறார்கள். ஆனால் ஒரு மையத்தில் இருந்து சரிபார்க்கப்பட்ட, தொகுக்கப்பட்ட புள்ளிவிபரம் யாரிடமாவது உண்டா?
விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாக இருந்த காலகட்டத்தில், ”தமிழர் புனர் வாழ்வுக் கழகம் இயங்கியது”. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது அவ்வாறு ஒரு மையத்தில் இருந்து புள்ளி விபரங்களைச் சேகரிக்கின்ற, தேவைகளையும் வழங்களையும் ஒருங்கிணைக்கின்ற,மையத் தொண்டு நிறுவனம் எதுவும் கிடையாது. இப்பொழுது காசும் மனமும் இருந்தால் வள்ளலாகலாம். அதைப் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, புகழும் பெறலாம். இவ்வாறு எழுதுவதன் நோக்கம் உண்மையான வள்ளல்களைக் குறை கூறுவது அல்ல. ஆனால் இந்த வள்ளல்களின் தொண்டுத் தேசியத்தில் புகழாசை ஒரு பெரிய உந்து சக்தி. அதேசமயம் ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாதவாறு அள்ளிக்கொடுக்கும் வள்ளல்களும் உண்டு.
2009 க்குப்பின் தினக்குரல் ஆசிரியராக இருந்தவர், தினக்குரல் வார இதழில் “கருணைப் பாலம் “என்று ஒரு பகுதியை ஆரம்பித்தார். அதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவி செய்வதற்குத் தேவையான இடையூடாட்டத் தளம் ஒன்று உருவாக்கப்பட்டது. அது ஒரு நல்ல முயற்சி. 2009ஐ உடனடுத்து வந்த காலகட்டத்தில் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் அங்கே ஓர் அடிப்படைக் கேள்வி உண்டு. அதற்கு “கருணை பாலம்” என்று பெயர் வைத்தது பொருத்தமா ? உதவி செய்பவர்கள் கருணை உள்ளவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவிசெய்வது என்பது கருணையின் அடிப்படையில் மட்டும் அல்ல. அதைவிட ஆழமான பொருளில் அது ஒரு தேசியக் கடமை.தமது தாய் நிலத்துக்காகத் தம்மைத் தியாகித்தவர்கள், உறுப்புகளை இழந்ததவர்கள், சொத்துக்களை இழந்ததவர்கள், ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்… போன்றவர்களுக்கு உதவுவது என்பது ஒரு தேசியக் கடமை. அதைக் கருணை என்ற வார்த்தைக் கூடாக விளங்கிக் கொண்டால், தம் தேசத்துக்காக தம்மை தியாகித்தவர்களும் அவ்வாறான தியாகங்களால் பாதிக்கப்பட்டவர்களுந்தான் அதை விடப் பெரிய அளவுக்கு கருணை கொண்டவர்கள்.ஏனென்றால் அவர்களுடைய கருணையானது,உயிரைக் கொடுக்கும் அளவுக்கு அல்லது உறுப்புக்களைக் கொடுக்கும் அளவுக்கு அல்லது இழக்கக்கூடாததை இழக்கத் தயாரான அளவுக்குப் பெரியது;மகிமைக்குரியது. எனவே இந்த இடத்தில் கருணை என்பதை விடவும் அதை ஒரு தேசிய கடமை என்றுதான் கூறுவது பொருத்தமானது.
உதாரணமாக,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் தென்னிலங்கையில் நடக்கும் யுத்த வெற்றி கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய விடயத்தைத் தொகுத்துப் பார்க்கக்கூடியதாக உள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதைக் காணமுடிந்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதி உறுப்புகளை இழந்த, உடல் வழங்காத படை ஆட்களை அவர்களுடைய இடத்துக்குச் சென்று சந்தித்தார். அந்த நாளில் அவர்களைச் சந்திப்பதன்மூலம் அவர் யுத்த வெற்றியை, தான் எவ்வாறு கொண்டாடுகிறார் என்று உலகத்துக்குக் காட்ட முற்பட்டார்.
இந்த ஆண்டும் அப்படித்தான்.நடமாட முடியாத,சக்கர நாற்காலிகளின் உதவியோடு நடமாடும், படை ஆட்களின் நீண்ட அணிவகுப்பு ஒன்றினை கடந்த மே 19ஆம் திகதி காணமுடிந்தது. அதாவது தேசிய மக்கள் கட்சி அரசாங்கமானது நமது நாட்டுக்காகப் போராடி இப்போது சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்களைக் கௌரவிக்கின்றது. அவர்களை மகிமைப்படுத்துகின்றது. அவர்களுக்கு உதவுவதை ஒரு தேசியக் கடமையாக அதைவிட குறிப்பாக யுத்த வெற்றி கொண்டாட்டங்களின் ஒரு பிரதான பகுதியாகக் காட்டுகிறது. யுத்த வெற்றியை கொண்டாடுவது என்பது அந்த வெற்றிக்காக உழைத்த, அதனால் உடல் உறுப்புகளை இழந்த,உடல் வளங்காத படை ஆட்களைக் கௌரவிப்பது, மகிழ்விப்பதுதான் என்பது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு உணர்த்த விரும்பும் செய்தியாகும்.
அது ஓர் அரசுடைய தரப்பு.அதனால் ஒரு மரபுப் படை கட்டமைப்பையும் அதனோடு சார்ந்த ஏனைய படையினரின் நலன்பேண் கட்டமைப்புகளையும் கொண்டிருக்கும். அங்கே அரசின் திறை சேரியில் இருந்து தியாகிகளுக்கும் தியாகிகளின் குடும்பத்துக்கும் போரின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகள் நன்கொடைகள் வழங்கப்படும். ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் மத்தியில் நிலைமை அவ்வாறு இல்லை. வள்ளல்கள் தனித்தனியாக செயற்படுகிறார்கள். சில வள்ளல்களுக்கு என்று தனியான உலகம் உண்டு. வள்ளல்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தன்னார்வ நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கு தமிழ்க் கட்சிகளாலும் முடியவில்லை. தாங்களே தங்களுக்குள் ஒன்றுபட முடியாத கட்சிகள் எப்படி புலம்பெயர்ந்த பரப்பில் இயங்கும் தன்னார்வ அமைப்புகளை ஒற்றுமைப்படுத்துவது?
இந்த வெற்றிடத்தில்தான் சிவாஜி வாய்விட்டு உதவி கேட்க வேண்டி வந்தது. அப்படி அவர் வாய்விட்டுக் கேட்டதே தமிழ்த்தேசிய அரசியலின் இயலாமையைக் காட்டுகிறது. அதேசமயம் வாய்விட்டுக் கேட்க வெட்கப்படும் ஒரு தரப்பினரும் சமூகத்தில் உண்டு. அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்களுக்கு யார் உதவி செய்வது?
















