ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “பொருநை” ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டது
Share
ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், `பொருநை’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் `பொருநை’ நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிபில் பிரதீப்குமார் – இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இந்த ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளனர். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பட்டுள்ள இப்படம் தற்போது துருக்கியில் திரையிட தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் திரையிடலில் ‘பொருநை’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் ஆவணப்படம் ‘பொருநை’ என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார். ‘பொருநை’ ஆவணப்படம் தொடர்பாக ஹிப் ஹாப் ஆதி கூறும்போது, “2016-ல் தொடங்கி 2019 வரை நான்கு வருடம் தமிழ் எழுத்துகள் எவ்வாறு உருவானது என்பது பற்றிய ஒரு வரலாற்று ஆவணப் படத்தை உருவாக்கினோம். அது எல்லா தரப்பிலும் வரவேற்பு பெற்றுத் தந்தது. இந்த ஆவணப் படம் முடியும் தருவாயில் ‘பொருநை’ என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படம் உருவாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம். 2021-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் தொல்லியல் ஆராய்ச்சியைக் கண்டறிய பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கிய போது, அவர்களது அனுமதியுடன் அந்த பணிகளை ஆவண படமாக்க 2021 முதல் படப்பிடிப்பைத் தொடங்கினோம். இந்த ஆராய்ச்சியில் நிச்சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறி வந்தனர். எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச்சியில் உண்மையானது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது துருக்கி நாட்டில் உள்ள ஒரு பகுதியில் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாறி இருக்கிறது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது, அதாவது பழமையான இரும்பு கலாச்சாரம் தமிழகத்தில் தான் தோன்றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது” என்றார்.
















