LOADING

Type to search

இலங்கை அரசியல்

“தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு கட்சியும் தீவிரம்”

Share

இது ஓரு பேராபத்து என்று கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

ந.லோகதயாளன்.

புதிய அரசமைப்பு என்ற பெயரில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்றும், அவ்வாறு அது நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை இழந்து அடிமையினமாக மாற்றப்படும் பேராபத்து ஏற்படும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகரின் மூன்றாம் வட்டாரத்துக்குட்பட்ட கோரியடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் குறிப்பிட்ட தொகை வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இதனைத் தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையாகத் தேசிய மக்கள் சக்தி சர்வதேச ரீதியாகக் காட்டி வருகின்றது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்படும் இந்த அரசு, புதிய அரசமைப்பு என்ற பெயரில் 2015 – 2019 காலப்பகுதியில் நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அரசமைப்பை நிறைவேற்றத் தீவிரம் காட்டி வருகின்றது.

அதனை உருவாக்குவதில் நல்லாட்சி காலத்தில் துணைநின்ற சுமந்திரன், இப்போதும் அதற்கு ஆதரவு வழங்குவதில் தீவிரமாக உள்ளார். அந்த அரசமைப்புக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது வாக்களித்தால், அவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாகக் கட்சியின் செயலாளர் என்ற ரீதியில் சுமந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார். அன்று கூட்டமைப்பாக இருந்தவர்கள் இன்று வீடு, சங்கு எனப் பிரிந்து நிற்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என வடக்கு, கிழக்கில் உள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில், எம்மைத் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தவிர ஏனைய 18 பேரும் இந்த அரசமைப்புக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பை மாற்ற வேண்டுமானால் அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஏனெனில், ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அரசமைப்பின் மூலம் இந்த நாடு சிங்களவர்களுக்கானதாக முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும். அதன் பின்னர் தமிழர்கள் அடிமை இனமாக மாறும் பேராபத்து ஏற்படும். ஆகவே, எமது உரிமைகளை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது.” – என்றார்.

இந்த மக்கள் சந்திப்பின் போது, பருத்தித்துறை நகர சபையின் சமகால செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதோடு, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அபிப்பிராயங்கள் கேட்டறியப்பட்டன.

கோரியடி வாழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, வட்டியின்றி இலகு தவணையில் மீளச் செலுத்தக்கூடியவாறு தலா ஒரு இலட்சம் ரூபா சுழற்சிமுறைக் கடன் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, நகர பிதா டக்ளஸ் போல் தனது சொந்த நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். இதற்கான காசோலை அவராலேயே சங்கத் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

அண்மையில் வடமராட்சி கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது மாயமாகிக் காணாமல்போன கோரியடி மீனவரான சு.சுஜிக்குமாரின் பிள்ளைகளின் கல்வி கற்கும் காலம் முழுவதுக்குமான கல்விச் செலவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், அந்தப் பிரதேசத்தில் கல்வி கற்கும் ஏனைய சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.